இனத்துவ அரசியலுக்கு வித்திடுவதை ராஜேஸ்வரன் உடன் நிறுத்த வேண்டும் : ஆரிப் சம்சுதீன் !

சுலைமான் றாபி

ஊடகங்களில் செய்திகள் வரவேண்டும் என்பதற்காக தமது இனத்துவ நலன்களை பேணுவது போல் வெறும் மாயையை தோற்றுவித்து அதன் மூலம் இனத்துவ அரசியலுக்கு வித்திடுவதை கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் ராஜேஸ்வரன் உடன் நிறுத்த வேண்டும் என கிழக்கு மாகாணசபையின் உறுப்பினரும், சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீன் இன்று (01) நிந்தவூர் அறபா பாலர் பாடசாலையில் இடம்பெற்ற சிறுவர் தினத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் அவர் அங்கு உரை நிகழ்த்துகையில் : 

Ariff Samsudeen

நேற்றைய தினம் (30.09.2015) கல்முனை நீதவான் நீதிமன்றில் மத்திய முகாமைச்சேர்ந்த முஸ்லிம் சகோதரர்கள் உழ்ஹிய்யாவிற்காக (குர்பானிக்காக) அறுக்கப்பட்ட மாடுகளின் இறைச்சிகளை ஆற்றில் கழுவியதற்காக கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் ராஜெஸ்வரனின்  தலைமையில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை செய்து குறிப்பிட்ட 05 முஸ்லிம் சகோதரர்களை நீதிமன்றில் நிறுத்தி குற்றத்தினை ஒப்புக் கொண்டதினால் அவர்களுக்கு தலா 10,000 ரூபா தண்டத்தீர்ப்பளிக்கப்பட்டது. 

உண்மையில் இந்த நிகழ்வானது மனவருத்தப்பட வேண்டியதொன்றாகும். ஏனென்றால் மாகாண சபையில் பக்கத்து பக்கத்து ஆசனங்களில் ஒன்றாக அமர்ந்து  இருக்கின்ற போது இந்த சிறிய விடயங்களை பெரிது  படுத்த வேண்டிய அவசியம் இல்லை. 

இந்த நிகழ்வினை ராஜேஸ்வரன் அவர்கள் வேறு விதமாக அணுகியிருக்க முடியும். இவ்வாறான அசௌகரியமான சம்பவங்கள் நடைபெறுகின்ற போது நட்பு ரீதியில் இந்த விடயங்களைக் கையாண்டு அதற்கான தீர்வுகளைப் பெற்றிருக்கலாம். ஆனால் இது தொடர்பில் பொலிஸ் மற்றும் நீதிமன்றங்கள் சென்றுதான் தீர்வுகளைப் பெறவேண்டிய அவசியம் இல்லை. 

அரசியல் வாதிகள் எனப்படுவோர் மக்களை வழி நடாத்தக் கூடியவர்கள். இதைவிடுத்து யார் வெல்லுவது, யார் தோற்பது என்ற பிடிவாதங்களை அரசியல் மூலம்  பழி தீர்த்துக் கொள்ளக் கூடாது. மக்களிடையே இணக்கத்தினை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டுமே தவிர பிணக்குகளை ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது. 

எது எவ்வாறாக இருந்தாலும் குறித்த நிகழ்வானது தமிழ் மக்களுக்கு எவ்விதமான இடையூறுகளையும் ஏற்படுத்தவில்லை என்பதற்காகவும், குற்றத்தினை ஒப்புக் கொண்டதின் மூலம் சந்தேக நபர்களான  குறித்த முஸ்லிம் சகோதரர்கள் தண்டத்தீர்ப்பளிக்கப்பட்டனர். 

எனவே ராஜேஸ்வரன் போன்றோர்கள் தமது இனத்துவ நலன்களை பேணுவது போல் வெறும் மாயையை தோற்றுவித்து அதன் மூலம் இனத்துவ அரசியலுக்கு வித்திடுவதை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.