முஸ்லிம்களுக்கும் நீதி வேண்டும் !

எஸ்.அஷ்ரப்கான்

 

ஜெனீவாவில் பிரேரிக்கப்படுகின்ற விசாரணைப் பொறிமுறையில் முஸ்லிம்களுக்கான பாதிப்பும் உள்வாங்கப்பட்டு விசாரிக்கப்பட  வேண்டும். இதற்காக முஸ்லிம் தலைமைகள் உடனடியாக களத்தில் இறங்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சட்ட ரீதியான செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

YLS

இதுவிடயமாக அவர் மேலும் குறிப்பிடும்போது,

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு தற்பொழுது இலங்கை விவகாரம் தொடர்பாக விவாதித்துக் கொண்டிருக்கின்றது. இந்த விவாதத்தின் கருப்பொருள் இறுதி யுத்தத்தின்போது பாரிய மனிதப் படுகொலை இடம்பெற்றிருக்கின்றது. குறிப்பாக படைத்தரப்பினரால் இக்குற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக விசாரணைகள் செய்யப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். எனவே இது தொடர்பான விசாரணை சர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழுவினாலா அல்லது கலப்பு நீதிமன்றத்தினாலா செய்யப்பட வேண்டும். அல்லது அது உள்ளக விசாரணையாக இருக்க வேண்டுமா ? என்பதாகும். இங்கு “விசாரணைகள்” என்ற சொல் குறித்து நிற்பது இறுதி யுத்தத்தின்போது ஏற்பட்டதாகக் கூறப்படும் பாதிப்புக்களையாகும்.

 

விடுதலைப் புலிகள் 30 வருடகாலம் யுத்தம் புரிந்திருக்கின்றார்கள். இதில் பாதிக்காலம் ஏனைய இயக்கங்களும் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றன. இந்த யுத்தம் அரசுக்கு எதிராக தமிழ் மக்களுக்கு நியாயம் வேண்டி செய்யப்பட்ட யுத்தமாக கூறப்படுகின்றது. ஆனால் உண்மையில் இந்த யுத்தம் சம்மந்தப்பட்ட அனைத்து இயக்கங்களாலும் இரு முனைகளை நோக்கி செய்யப்பட்டிருக்கின்றது. அதில் ஒன்று அரச படைகளாகும். அடுத்தது முஸ்லிம்கள் என்ற ஒரு அப்பாவி சமூகமாகும். முஸ்லிம்கள் காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுது கொண்டிருக்கும்போது சுடப்பட்டார்கள். ஏறாவூர் “சதாம்” கிராமத்தில் கொல்லப்பட்டார்கள். அளிஞ்சப் பொத்தானையில் கொல்லப்பட்டார்கள். கல்முனைக்குடியில் கொல்லப்பட்டார்கள். சாய்ந்தமருது, மாளிகைக்காடு கிராமங்களில் கொல்லப்பட்டார்கள். இவ்வாறு பல இடங்களிலும் கொல்லப்பட்டார்கள். மட்டுமல்லாமல் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று போன்ற பொலிஸ் நிலையங்களில் சரணடைந்த முஸ்லிம், சிங்கள பொலிஸ்காரர்களை சுட்டுக் கொன்றார்கள். இது சகல யுத்த விதிகளுக்கும் அப்பாற்பட்டது. இன்று கோரப்படுகின்ற விசாரணையில் ஒரு பிரதான அம்சம் யுத்தத்தில் சரணடைந்த புலிகளைக் கொன்றது என்பதாகும். ஆனால் சரணடைந்த பொலிஸ்காரர்களை புலிகள் கொன்றார்கள் என்ற மறுபக்கத்தைத்தான் இங்கு நாம் குறிப்பிடுகின்றோம். அதேபோன்று முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் காலத்தில் உருவாக்கப்பட்ட சீ.வி.எப். என்கின்ற பிரஜைகள் தொண்டர் படையில் சட்டபூர்வமாக சேர்க்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.என்.டி.எல்.எப். போன்ற இயக்கங்களால் கொல்லப்பட்டார்கள். இவைகள் விசாரிக்கப்படக் கூடாதா ? இவைகள் மனிதப்படுகொலைகள் இல்லையா ? இவைகள் தொடர்பாக ஜெனீவா ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது.  அதேபோன்று ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அது குற்றமில்லையா ?

 

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு சாராருக்கு எதிரான குற்றங்கள் மட்டும் விசாரிக்கப்பட்டு அதற்குரிய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று பிரேரிக்கப்படுவது ஓரபட்சமானது. அடுத்த சாராருக்கு எதிரான குற்றங்களும் விசாரிக்கப்பட்டு அதன் குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும். இன்று தமிழ் பிரதிநிதிகள் ஜெனீவாவில் தங்கியிருந்து  தங்களுக்கு நியாயம் கோருகின்றார்கள். ஒவ்வொரு ஜெனீவா கூட்டத் தொடருக்கும் அவ்வாறு செல்லுகின்றார்கள். அதனால் அவர்கள் பக்கத் தரப்பு சர்வதேச கவனத்தை ஈர்க்கின்றது. ஆனால் மறுபுறத்தில் முஸ்லிம்கள் பக்கத் தரப்பைச் சொல்லுவதற்கு ஜெனீவாவில் யாருமில்லை. ஜெனீவாவைப் பொறுத்தவரை இலங்கை முஸ்லிம்கள் கேட்பார், பார்ப்பார் அற்ற அநாதைகள். ஆனால் தேர்தல் காலங்களில் முஸ்லிம்களுக்கு நிறையவே வீரப்புரிசர்கள் இருப்பார்கள். 

இன்று முஸ்லிம்களுக்கு 21 பாராளுமன்ற பிரதிநிதிகள் இருந்தும் முஸ்லிம்கள் ஜெனீவாவில் அநாதைகளாக இருக்கின்றோம். எனவே இன்றும் காலம் தாழ்ந்துவிடவில்லை. முஸ்லிம் தலைமைகள் அவசரமாக காரியத்தில் இறங்க வேண்டும். பிரேரிக்கப்படுகின்ற விசாரணைப் பொறிமுறை முஸ்லிம்களுக்கான பாதிப்பையும் உள்வாங்கத்தக்கதாக இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்