இதன்போது மனித உரிமைகள் ஆணையாளர் சைட் ராத் அல் ஹூசைன் அறிக்கை தொடர்பில் உரையாற்றிய காணொளி ஔிபரப்பட்டது.
இலங்கையில் 2015ம் ஆண்டுக்குப் பின் கருத்துச் சுதந்திரத்திற்கு இடமளிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் வடக்கு மற்றும் கிழக்கில் கண்காணிப்பு மற்றும் குறுக்கீடுகள் தொடர்ந்தும் பதிவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதானவர்கள் குறித்த விபரத்தை இலங்கை அரசு இன்னும் தௌிவுபடுத்தவில்லை. கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மீதான தாக்குதல் குறித்து அப்போதைய அரசு விசாரணை நடத்தவில்லை எனக் குறிப்பிட்ட அவர் அளுத்கம தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் சுட்டிக்காட்டினார்.
இலங்கை போர் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் உரிய நீதி கிடைக்கவில்லை. இங்கு தனியார் நிலத்தை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளமை பாரிய பிரச்சினையாக உள்ளது. எனினும் அண்மைக் காலங்களில் சில நிலங்களை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுத்தது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகளை இலங்கையில் முந்தைய அரசு நிராகரித்ததோடு, ஒத்துழைக்கவும் மறுத்தது எனக் கூறினார்.
மேலும் அவர், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விலக்கிக்கொள்ள அரசு அளித்த உறுதிமொழி வரவேற்கத்தக்கது. இலங்கையில் புதிய ஆட்சியில் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது. புதிய அரசு அமைந்த பிறகு தாக்குதல் குறித்த விசாரணையில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்ள நீதிமன்றக் கட்டமைப்பு யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான நம்பகமான விசாரணை நடத்தக்கூடிய அளவிற்கு பொருத்தமானதல்ல என இங்கு குறிப்பிட்ட அவர், கலப்பு நீதிமன்றக் கட்டமைப்பு ஒன்றின் ஊடாக குற்றச் செயல்களுக்குப் பொறுப்பு கூறுதல் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் தெரிவித்துள்ளார்.