அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த தனது தாய்க்கு 11 வயது மகன் பிரசவம் பார்த்து தாய் மற்றும் தனது தம்பியின் உயிரைக் காத்துள்ளான்.
ஜோர்ஜியாவிலுள்ள மரியேட்டா பகுதியைச் சேர்ந்த கென்யார்டா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இவருக்கு குறிப்பிடப்பட்டிருந்த திகதிக்கு முன்னதாகவே திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து, பிரசவ வலியால் தாய் கதறிக்கொண்டிருப்பதைக் கண்ட அவரின் 11 வயது மகன் ஜேம்ஸ் டியூக்ஸ் உடனடியாக ஓடிச்சென்று கென்யார்ட்டாவின் சுகப்பிரசவத்திற்கு உதவியதோடு மட்டுமின்றி, அவசர சிகிச்சை மையத்திற்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளான்.
அவசர சிகிச்சைப் பிரிவினர் வழங்கிய அறிவுரைப்படி குழந்தையின் வாய் மற்றும் மூக்குப் பகுதியைத் துடைத்துவிட்டு கதகதப்பான துணியில் சுற்றிக் கிடத்தி வைத்துள்ளான்.
விரைவில் வந்துசேர்ந்த மருத்துவர்கள் தாயையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
என் மகன் தைரியமானவன். வலியாலும், வேதனையாலும் நான் துடித்தபோது அவன் சற்றும் மனம் தளராமல் அந்த சூழ்நிலையை மிக சரியாகக் கையாண்டான். அவனைப் பெற்றதற்காக நான் பெருமைப்படுகிறேன்.
என கென்யார்டா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனது தாய்க்குப் பிரசவம் பார்த்த அந்த சிறுவனை அமெரிக்க ஊடகங்கள் புகழ்ந்துள்ளன.