யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த கொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 9 சந்தேகநபர்களும் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
மாணவியின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணு மற்றும் சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகள் தொடர்பிலான மரபணு பரிசோதனை அறிக்கைகள் இதுவரை கிடைக்கவில்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளனர்.
இந்த மாதிரிகளை பொறுப்பேற்றதாக ஜின்டெக் நிறுவனம் வழங்கிய அறிக்கையொன்றும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவரிடம் விசாரணை நடத்தவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயங்களைக் கருத்திற்கொண்ட நீதவான் வழக்கு விசாரணையை ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.
அதுவரை சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.