சேரிகளில் வசிக்கும் நகரப்புற வறிய மக்களுக்கு மாற்று வழியாக வசதிகளுடன் கூடிய வீடமைப்புத் திட்டங்கள் அதிகமாக ஏற்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், அதற்காக எந்தச் சவாலுக்கும் முகம் கொடுக்கத் தயாராக வேண்டுமென்றும் கொழும்பில் நடைபெற்ற உலக வங்கியின் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது தெரிவித்தார்.
அமைச்சர் ஹக்கீம், கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை (29) முற்பகல் நடைபெற்ற உலக வங்கியின் ‘தென்கிழக்காசியாவில் நகரமயமாக்கல்’ பற்றிய அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் ‘நிலையான நகர அபிவிருத்தி மற்றும் திட்டமிடல்’ என்ற தொனிப்பொருளில் சிறப்புரையாற்றிய போதே இதனைக் கூறினார்.
இந்நிகழ்வில் பெருநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, உலக வங்கியின் சிரேஷ்ட பணிப்பாளர் எடி ஜோர்ஜ் இஜாஸ் இலங்கைக்கும் மாலைதீவுக்குமான உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் பிரங்கொயிஸ் கொலடஸ் ஆகியோரும் உரையாற்றினர்.
அமைச்சர் ஹக்கீம் தமது உரையின் போது மேலும் தெரிவித்ததாவது,
இலங்கையின் எதிர்காலம் நகரமயமாக்கலை சரியான முறையில் முகாமைத்துவம் செய்வதிலேயே தங்கியிருக்கின்றது. எனக்கு தற்பொழுது வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பொறுப்பின் முக்கியமான ஒரு பகுதி நகரங்களை உரிய முறையில் திட்டமிடுவதாகும்.
கொழும்பு நகரில் மட்டும் 50,000ற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசதி குறைந்த குடியிருப்புகளில் அதாவது ஆரோக்கியமற்ற சேரிப்புறங்களில் வசிக்கின்றனர். இந்தக் குடியிருப்புகள் மொத்தத்தில் ஆயிரக்காணக்கான ஏக்கர்களில் விசாலமானவை. அதேவேளையில் உயரமான தொடர்மாடி வீடுகள் நகரத்தில் விலைமதிப்புக்கூடிய பகுதிகளில் கட்டியெழுப்பப்படுவதால் மத்திய தர வர்க்கத்தினர் வீட்டுப் பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது. அவர்கள் மேல் மாகாணத்தின் புறநகரப் பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து வாழவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
மாநகரப் பிரதேசங்களில் உட்கட்டமைப்பு ஏற்பாடுகளான நீர் விநியோகம், வடிகால், திண்மக் கழிவகற்றல், சுகாதாரம், மின்சாரம் போன்றவை மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. வாகன உரிமையாளர்களின் அதிகரிப்பு பாதைகளின் நெரிசலை கூட்டியிருக்கின்றது.
உலக வங்கியின் அறிக்கையை மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது இலங்கையிலும் நகரப்புற மக்கள் மத்தியில் காணப்படும் வறுமை வெகுவாக அகன்றிருக்கின்றது. இது 2002ஆம் ஆண்டில் 7.9 வீதமாக இருந்து பின்னர் 2013ஆம் ஆண்டு 2 வீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நகரங்களின் சேரிகளில் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு குறைந்துள்ளது. இலங்கையின் நகரங்கள் வாழ்வாதார வசதிகள் மிக்கனவாகவும், சுபீட்சகரமானதாகவும் மாற்றம் பெற்று வருகின்றன.
சேரிகளில் வாழும் நகரப்புற வறிய மக்களுக்கு மாற்று வழியாக வீடமைப்புத் திட்டங்கள் அதிகமாக ஏற்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் நகரத்தில் வசிதியோடு வாழும் மக்களுக்கு ஊழியம் புரிகின்றனர். அத்துடன் அவர்கள் துறைமுகத்திலும், தொழில் பேட்டைகளிலும் தொழிலாளர்களாக உழைக்கின்றனர்.
தொழில் பாதுகாப்பற்ற ஆபத்துகளுக்கு உள்ளாகும் நிலைமையில் வசிக்கும் மற்றும் தொழில் புரியும் சேரிப்புற மக்கள் மீது எங்களது கவனம் வெகுவாக ஈர்க்கப்படுவதும் அவசியமாகும். இதனை உலக வங்கியின் அறிக்கையும் சுட்டிக்காட்டுகின்றது.
வேகமாக அதிகரித்து வரும் சனத்தொகைக்கு ஏற்புடையதாக சமூகப் பொருளாதார பௌதீக உட்கட்டமைப்பு வசதிகளுக்கேற்ப நகரமயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நகரமயமாக்கல், பூகோளமயமாக்கல், வர்த்தகம், தகவல் தொழிநுட்பம், தொழிற்சாலைகள் என்பன பட்டினப் பகுதியை நோக்கி மக்களை ஈர்க்கச் செய்கின்றது. நகரத்தை அண்டிய பகுதிகளில் விவசாயத்தில் ஈடுபடும் குடிமக்களின் எண்ணிக்கை குறைந்து தொழிற்சாலைகளில் வேலை தேடுவோரின் தொகை கூடிச் செல்கின்றது. இதற்கு நவீன விவசாய யுத்திகளை கையாள்வது இதற்கு ஓரு மாற்று வழியாகும் என்றார்.
ஜெம்சாத் இக்பால்