சுலைமான் றாபி, றபீக் பிர்தௌஸ்
சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினத்தினை முன்னிட்டு தேசிய ரீதியிலான பிரதான வைபவம் கடந்த 19ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு காலி முகத்திடலில் அங்குராப்பணம் செய்யப்பட்டது.
இதனையொட்டி மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சுடன் கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினரால் நாடு முழுவது ஒவ்வொரு மாகாணத்திலும் இது தொடர்பான நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்தின், நிந்தவூர் பிரதேசத்திற்கான பிரதான நிகழ்வு இன்று (22) நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ஆர்.யு. அப்துல் ஜலீல் தலைமையில் நிந்தவூர் கடற்கரைப் பூங்கா பிரதேசத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசிம், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ. அமீர், அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெலும் திலகரட்ன, சம்மாந்துறை பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி பிரியலால், அம்பாறை மாவட்ட சுற்றாடல் ஆணையாளர் எம்.ரி.நௌபல் அலி மற்றும் இராணுவ படை அதிகாரிகள், பொலிசார், பிரதேச சபை ஊழியர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மீனவ கூட்டுறவுசங்க உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வு, நிந்தவூர் பிரதேசத்தினை 10 வலயங்களாகப் பிரித்து முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை எமது நாட்டில் உள்ள சுமார் 570 கிலோ மீற்றர் பரப்பான இந்த கரையோரப்பிரதேசங்கள் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலமாக துப்புரவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கரையோரத்தையும், சுற்றாடலையும் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.