உலகின் ஒரே இந்து நாடான நேபாளத்தில் மதச்சார்பற்ற புதிய அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது !

அபுசாலி சுல்பிகார் 
 உலகின் ஒரே இந்து நாடான நேபாளத்தில் மதச்சார்பற்ற புதிய அரசியல் சாசனம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்த புதிய அரசியல் சாசனத்துக்கு எதிரான போராட்டங்களும் அந்நாட்டில் தொடர்கின்றன. நேபாளத்தில் 240 ஆண்டுகளாக மன்னராட்சி நடைமுறை அமலில் இருந்தது. மக்கள் கிளர்ச்சியால் 2008ஆம் ஆண்டு மன்னராட்சி முறை அகற்றப்பட்டு மக்களாட்சி முறை நடைபெற்று வருகிறது.

q

 தற்போது அந்நாட்டில் மதச் சார்பற்ற புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அதற்கான ஒப்புதலும் நாடாளுமன்றத்தில் பெறப்பட்டது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த 13-ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த புதிய அரசியல் சாசனத்தின் ஒவ்வொரு பிரிவு மீதும் விரிவாக விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த மதச்சார்பற்ற புதிய அரசியல் சாசனம் நேற்று முதல் நடைமுறைக்கு வருவதாக அந்நாட்டு அதிபர், ராம்பரன் யாதவ் அறிவித்தார்.

நாட்டில் பெரும்பான்மையாக இந்துக்கள் வாழ்ந்து வந்தாலும், மதச்சாற்பற்ற நாடாக நேபாளம் இருக்கும் என்று புதிய அரசியல் சாசனம் கூறுகிறது. இந்த சாசனத்தின் அடிப்படையில் கூட்டாட்சியை அடிப்படையாக் கொண்டு நேபாளம் 7 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்காக புதிய எல்லைகள் வகுக்கப்படும். ஒட்டு மொத்த அதிகாரங்கள், மத்திய அரசின் வசம் இருந்தாலும், மற்ற அதிகாரங்கள், மாகாண அரசுகளுக்கு பிரித்து கொடுக்கப்படும்.