அஸ்லம் எஸ்.மௌலானா
இலங்கை முஸ்லிம்களுக்கு தனித்துவமான அரசியல் பாதையை வகுத்து அப்பாதையில் மக்களை ஒரு குடையின் கீழ் அணி திரட்டி புதுமை படைத்தவர் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களாவர் என கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சிரேஷ்ட பிரதித் தலைவருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு செவ்வாய்க்கிழமை (2015-09-15) மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 15ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு விசேட ஞாபகார்த்த உரை நிகழ்த்துகையிலேயே பிரதி முதல்வர் அப்துல் மஜீத் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;;
“ஒரு சமூகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அச்சமூகத்துக்கு தலைமை தாங்கும் அரசியல் தலைமையின் ஆழுமையிலும் ஆற்றலிலுமே தங்கியுள்ளது. அத்தகைய ஆளுமையும் ஆற்றலும் அரசியல் தீர்க்க தரிசனமும் உள்ள ஒரு தலைவராக மர்ஹும் அஸ்ரஃப் திகழ்ந்தார் என்பது வரலாறு கூறி நிற்கும் உண்மையாகும்.
1948 ஆம் ஆண்டு பிரித்தானிய பேரரசிடம் இருந்து இலங்கை சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டது. அந்த சுதந்திர இலங்கையில் முஸ்லீம் சமூகம் அரசியல் சுதந்திரமற்ற கூட்டமாக இருந்து வந்தது. இலங்கையை மாறி மாறி ஆட்சி புரிந்து வந்த பெரும்பான்மை சிங்களக் கட்சிகளால் பங்கு போடப்பட்டு அரசியல் தனித்துவமில்லாத கூட்டமாக முஸ்லிம்கள் காணப்பட்டனர்.
இஸ்லாமிய சோசலீச முன்னனி, மார்க்சிச எதிர்ப்பு முன்னனி, முஸ்லீம் லீக் போன்ற அமைப்புக்கள் அவர்கள் சார்ந்து நின்ற பெரும்பான்மை கட்சிகளுக்கு முஸ்லீம் வாக்குகளைப் பெற்றுக் கொடுத்து அதன் மூலம் தங்களது தலைமைத்துவங்களை பாதுகாத்து வந்தனர் என்பது நீண்ட வரலாறாகும்.
1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் திகதி சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்ற அரசியல் கட்சியை தலைவர் அஸ்ரப் அவர்கள் பிரகடனம் செய்யும் வரைக்கும் இலங்கை அரசியல் அரங்கில் முஸ்லிம்கள் சிறகுடைந்த பறவையைப் போன்று விடப்பட்டிருந்தனர்.
ஒரு சமூகத்தின் வளர்ச்சிக் கட்டமைப்புக்கு தேவையான அரசியல், பொருளாதாரம், கல்வி, கலாச்சாரம் போன்ற தூண்கள் ஒழுங்கு முறைப்படி வழர்ச்சியடைகின்ற போது அச்சமூகமும் அச்சமூகத்தின் எதிர்காலமும் சுபீட்சமும் மேன்மையும் அடைகிறது. அச்சமூத்ததை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் தனித்துவம் இழக்காமல் சமூகத்தின் உரிமைகளையும் தேவைகளையும் பெற்றுக் கொடுக்கும்போது அச்சமூகம் அரசியலில் பலம் பெறுவதுடன் பிரகாசமும் அடைகிறது. மர்ஹும் அஸ்ரஃப் அவர்கள் அத்தகைய போற்றுதலுக்குரிய தலைமைத்துவமாக திகழ்ந்தார்.
நாட்டில் புரையோடிப்போய் இருந்த இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் அன்றிருந்த தமிழ் அரசியல் தலைமைகளினால் முன்னெடுக்கப்பட்ட அறவழி அகிம்சை போராட்டம் தோல்வியடைந்து ஆயுதப் போராட்டமாக மாறியது. அப்போராட்டமானது வட-கிழக்கு மாகாணங்களில் முஸ்லீம் மக்களின் உயிர், உடமைகளை அழிவுக்குட்படுத்தியதுடன் அவர்களது இருப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியது.
இந்த வரலாற்றின் தாக்கத்தினை நேரடியாக அனுபவித்தவர் என்ற ரீதியில் முஸ்லீம் சமூகத்திற்கான உரிமைகளைப் பெறுவதற்கும் அவர்களது இருப்பைப் பாதுகாப்பதற்கும் தனித்துவமான ஒரு அரசியல் பலம் தேவை என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் கட்சியை தலைவர் அஸ்ரப் தோற்றுவித்தார்.
முஸ்லிம்களுக்காக தனித்துவமானதொரு அரசியல் கட்சி வேண்டும் என்ற குரல் நாட்டின் பல பகுதிகளிலும் ஒலிக்கப்பட்டு வந்தபோதிலும் பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற கேள்வி இருந்து வந்தது. அந்தக் கேள்விக்கு விடையைப் பெற்றுக் கொடுத்தவர்தான் பெரும் தலைவர் அஸ்ரஃப் அவர்கள்.
தேர்தல் ஆணையாளரால் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்கள் முடிவதற்கு முன் அதாவது 1988 ஏப்ரல் மாதம் 26ம் திகதி வட-கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே மாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. மாகாண சபை என்பது இனப்பிரச்சினைக்கு தீர்வாக அன்றைய ஐக்கிய தேசியக்கட்சி அரசிக்கும் இந்திய அரசிற்கும் இடையில் கைச்சாத்துடப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.
அம்மாகாண சபைத் தேர்தலை அன்றைய எதிர்க்கட்சியாக இருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னனி ஆகிய கட்சிகள் பகிஷ்கரித்தன. அதேவேளை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அத்தேர்தலில் களமிறங்கி 12 உறுப்பினர்களை பெற்றுக் கொண்டது. இவ்வெற்றியானது முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைத்த முதலாவது அரசியல் அங்கீகாரம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அத்தேர்தலைத் தொடர்ந்து இணைந்த வட-கிழக்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ், விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலைப் புறந்தள்ளி போட்டியிட்டது. அத்தேர்தலில் 17 மாகாண சபை உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டதுடன் முழு இலங்கையிலுமாக 29 மாகாண சபை உறுப்பினர்களைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது.
இலங்கை முஸ்லிங்களுக்கு தனித்துவமான அரசியல் பாதையை வகுத்து, அப்பாதையில் மக்களை ஒன்று திரட்டி, அவர்களைக் கட்டுப்படுத்தி அரசியல் புதுமை படைத்தவர் அஸ்ரஃப் அவர்கள் 1989ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ம் திகதி விகிதாசாரத் தேர்தல் அறிமுகத்தோடு பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரசை களமிறக்கினார்.
அத்தேர்தலில் தலைவர் அஸ்ரஃப் அவர்கள் திகாமடுல்ல மாவட்டத்திலும் ஹிஸ்புல்லா மட்டக்களப்பு மாவட்டத்திலும் சுந்தரமூர்த்தி அபூபக்கர் வன்னிமாவட்டத்திலும் போட்டியிட்டு வெற்றியீட்டினர். தேசியப்பட்டியல் ஊடாக புகார்தீன் ஹாஜியார் நியமிக்கப்பட்டார்.
1990களில் விடுதலைப் புலிகள் முஸ்லீம் பிரதேசங்களில் புகுந்து அப்பிரதேசங்களை கொலைக்களமாக மாற்றினர். இச்செயலைக் கண்டித்து அஸ்ரஃப் அவர்கள் கறுப்பு வெள்ளியொன்றை பிரகடனம் செய்து நாட்டை ஸ்தம்பித நிலைக்கு கொண்டு வந்தார். அவரது மூச்சும் பேச்சும் அவரது உணர்வுகளும் முஸ்லிம் சமூகமாகவே இருந்து வந்தது. அவரது அரசியல் கோட்பாடுகள், கொள்கைகள், இலக்குகளை வெற்றி கொள்வது எம்மீது இருக்கின்ற பாரிய சவாலாகும். அதற்காக அவரது தடத்தில் பயணிப்பதே அவருக்கு நாம் செய்யும் உயர்ந்த கௌரவமாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.