சம்மாந்துறையில் உதித்த அரசியல் வாதிகள் இளம் வயதில் பூத்துக் காய்த்து குலுங்கிக் கொண்டிருக்கும் அழகினை தனக்கு ஆபத்தை கருதிய எதிரிகள் நேரடியாக அரசியல் மூலம் எதிர்க்க சக்தி இன்றி அவர்களினை புறமுதுகில் குத்தி வீழ்த்தி இருந்தனர்.அவ்வாறே மரணித்த அமைச்சர் அன்வர் இஸ்மாயிலின் மரணமும் நிகழ்ந்தது எனலாம்.மரணத்தின் காரணங்கள் இயற்கை போன்று ஜோடிக்கப்பட்டாலும் அதில் சில மர்மங்கள் பொதிந்திருப்பதனையும் யாரும் மறுக்க முடியாது.
“அன்வர் இஸ்மாயிலிற்காய் மாடு அறுக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது” என்ற செய்தியே அன்வர் இஸ்மாயில் மிகக் கடுமையான நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார் என்பதை மக்களிடையே வெளிக்காட்டியது.எனினும்,மரணிக்கும் அளவு அது பாரதூரமானது எனும் அளவு யாரும் அறிந்திருக்கவில்லை.அன்வர் இஸ்மாயிலின் நோய் எப்போது குணமாகும் என்ற ஆவலுடன் மக்கள் காத்து நின்றனர்.இவ்வாறே நாட்கள் பல கடந்து சென்றன.
13-09-2007 ம் திகதி இலங்கை மக்கள் அனைவரும் நோன்புக்காய் தலைப்பிறை பார்ப்பதில் தங்கள் கவனத்தினை செலுத்துக்கொண்டிருந்த நேரம் மஃரிப் வேளை அன்வர் இஸ்மாயில் மரண தருவாயில் உள்ள செய்தி சம்மாந்துறை மக்களின் தலையில் இடி விழுந்தாப் போல் வந்தடைந்தது.14-09-2014 ம் திகதி அதிகாலை வெள்ளிக் கிழமை அமைச்சர் அன்வர் இஸ்மாயிலின் மரண செய்தி சம்மாந்துறையை வந்தடைந்தது.சம்மாந்துறை மண் தன் மீது பற்றுள்ள உண்மைச் சேவகனை இழந்த சோக இருளில் மூழ்கியது.அன்று சம்மாந்துறை எங்கும் நிசப்தமே நிலவியது.
ஜனாசாவை நாம் எப்போது பார்க்கப் போகிறோம்? என்ற சிந்தனை தான் அன்று ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இருந்தது.பல்லாயிரம் மக்கள் தலை நோன்பை பிடித்துக் கொண்டு மையித்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளை மையித்தும் சம்மாந்துறை நகர மண்டபத்தை வந்தடைந்தது.
பல்லாயிரம் மக்கள் தலை நோன்பை பிடித்த வண்ணம் மையித்தை பார்த்து பிராத்தனை செய்தார்கள்.மையித்தை பார்க்க இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் படை எடுத்து வந்தனர்.சம்மாந்துறையே மக்கள் வெள்ளத்தால் மூழ்கியது.இவரின் மையித்தினை பார்க்க அணிதிரண்ட அன்னிய மக்களினைப் பார்த்த போதே அவரது சேவையின் வீச்செல்லை மதத்தினையும் தாண்டி சென்றுள்ளது என்பதை புரிந்து கொள்ளக் கூடியாதாய் இருந்தது.
பல்லாயிரம் மக்கள் தலை நோன்புடன் பிராத்தனை செய்யும் இந்த பாக்கியம் எத்தனை பேருக்கு கிட்டும்? அந்நாளின் மற்று மொரு சிறப்புத் தான் அன்று வெள்ளிக் கிழமை.சம்மாந்துறை மஜீத் மண்டபத்தில் மக்கள் ஜனாசாவை பார்வை இட்டதைத் தொடர்ந்து சம்மாந்துறை பத்ர் ஜூம்மா பள்ளிவாயலினை நோக்கி ஜனாசா தொழுகைக்காய் கொண்டு செல்லப்பட்டது.ஜும்மா தொழுகையை தொடர்ந்து பல்லாயிரம் மக்கள் தலை நோன்பை நோற்ற வண்ணம் ஜனாசா தொழுகையில் பங்கெடுத்தனர்.சம்மாந்துறை பத்ர் ஜும்மா பள்ளிவாயலின் உள்ளே இடமில்லாமல் வெளியும்,வாசலும் நிரம்பி வழிந்தது.இதில்,எத்தனை முஃமின்கள இருந்திருப்பார்கள்? வெள்ளிக் கிழமை தலை நோன்பை பிடித்த வண்ணம் எத்தனை பேர் துஆச் செய்திருப்பார்கள்? உண்மையில் இவரது மரண நாளே இவர் செய்த நல்லறங்களை சுட்டி நிற்கிறது.
சம்மாந்துறையில் சேவைகளின் செம்மலாய்த் திகழ்ந்த அன்வர் இஸ்மாயிலின் பெயர் நெடுங்கிலும் ஒலிக்கும் வண்ணம் அன்வர் இஸ்மாயில் மாவத்தை,அன்வர் இஸ்மாயில் புரம்,அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலை,அன்வர் இஸ்மாயில் பள்ளிவாயல் ஆகியன உள்ளன.தொப்பி முகைதீனின் பெயரினை பறை சாட்ட முகைதீன் மாவத்தை எனும் மாவத்தை சம்மாந்துறையில் உள்ளது.இதற்கு பகரமாக இவர் அன்வர் இஸ்மாயில் தனது பெயரில் அன்வர் இஸ்மாயில் மாவத்தையினை உருவாக்கினார்.சம்மாந்துறையினை பல ஆண்டுகள் ஆண்ட மர்ஹூம் மஜீத் எம்.பியினால் மஜீத் புறம் எனும் ஓர் கிராமம் உருவாக்கப்பட்டது.அதற்கு பகரமாக அன்வர் இஸ்மாயில் தனது பெயரிலும் ஒரு கிராமத்தினை உருவாக்கியுள்ளார்.ஏட்டிக்குப் போட்டியாக சேவை செய்வதே இவரது சிறப்பம்சம் எனலாம்.இவரது காலத்தில் சம்மாந்துறையில் இவரைத் தவிர யாரினாலும் அரசியல் செய்ய முடியாத நிலை தான் காணப்பட்டது.இவரின் சேவைகளினை வார்த்தைகளினால் எழுதிவிட முடியாது.
முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் அந் நேரம் இவரது மரணத்தில் சில அரசியல் சித்து விளையாட்டுக்கள் இருப்பது போன்று மறை முகமான பல கருத்துக்களினை தெரிவித்திருந்ததனையும் அவதானிக்க முடிந்தது.இறால் விருந்துபசாரத்தில் நஞ்சுபசாரம் வழங்கப்பட்டதாகவும் ஒரு கதை உலா வருகிறது.இவைகளினால் தான் என்னவோ? குறித்த சந்தேகிக்கப்படும் நபர் இறுதி வரை முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜ பக்ஸவினை கட்டி பிடித்துக் கொண்டிருந்தார்களோ தெரியவில்லை.
மர்ஹூம் அன்வர் இஸ்மாயிலின் மரணத்திற்கு இந் நல்லாட்சியிலாவது நீதி கிடைக்குமா? இவரது மரத்தினைத் தொடர்ந்து இவரின் தேசியப் பட்டியல் வெற்றிடத்திற்கே பெசில் ராஜ பக்ஸ நியமிக்கப்பட்டிந்தார்.அந் நேரத்தில் அமைச்சராக இருந்த அன்வர் இஸ்மாயிலிடம் தனது பாராளுமன்ற உறுப்புருமையினை இராஜினாமா செய்ய பல அழுத்தங்கள் வழங்கப்பட்டதாகவும் அதற்கு மாற்றீடாக மர்ஹூம் அன்வர் இஸ்மாயிலில் கிழக்கு ஆளுனரினைக் கேட்டு அரசுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த சமயமே அன்வர் இஸ்மாயிலினை மரணம் வந்தடைந்தது.இந் நிகழ்வுகளினை ஒன்றோடு ஒன்று முடிச்சுப் போடுகின்ற போது பாரிய அவிழ்க்கப்படாத முடிச்சொன்று போடப்பட்டிருப்பதனை நாம் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளதல்லவா?
NOTE: அன்வர் இஸ்மாயிலின் நினைவு தினத்தினையொட்டி என்னால் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட இக் கட்டுரையினை சிறு திருத்தங்களுடன் மீள் பிரசுரம் செய்கிறேன்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்