செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டிப் படிமம் !

செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டி படிமங்கள் உறைந்திருப்பதற்கு ஆதாரமாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் அண்மையில் புகைப்படம் வெளியிட்டது.

செவ்வாய் கிரகத்துக்கு அடியில் பனிக்கட்டி படிமங்கள் உறைந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

sev_2548308f

மனிதன் வேறுகிரகத்துக்கு சென்று குடியேற வேண்டுமென்றால் செவ்வாய் கிரகத்துக்கு மட்டுமே செல்ல முடியும். அதனால்தான் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு விஞ்ஞானிகள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

செவ்வாயில் ஆறுகள் ஓடிய தடங்கள் உள்ளன. ஆனால் அங்கு தற்போது தண்ணீர் இல்லை. இந்நிலையில் செவ்வாய் கிரகத்துக்கு அடியில் பனிக்கட்டி படிமங்கள் உறைந்திருப்பதை ஐரோப்பிய விண்வெளி நிறுவன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கடந்த 2003 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக ‘மார்ஸ் எக்ஸ்பிரஸ்’ என்ற விண் கலத்தை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஏவியது.

அந்த விண்கலம் அனுப்பும் புகைப்படங்களை ஆதாரமாக வைத்து விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் அந்த விண்கலம் அனுப்பிய புகைப்படத்தில் செவ்வாய் கிரகத்தின் தெற்கு பகுதியில் அமெரிக்காவின் கலிபோர்னியா, டெக்சாஸ் மாகாணங்களின் பரப்பளவுக்கு இணையாக பனிக்கட்டி படிமங்கள் உறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது சுமார் 433,000 சதுர மைல் பரப்பளவுக்கு பனிக்கட்டி படிமங்கள் காணப்படுகின்றன. அதன் சராசரி தடிப்பு சுமார் 130 அடியாக உள்ளது.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாயில் பெய்த பனிப்பொழிவு காரணமாக இந்த பனிக்கட்டி படிமங்கள் உருவாகியிருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் பல்வேறு வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆனால் இத்தனை ஆண்டுகளாகியும் பனிக்கட்டி உருகாமல் அப்படியே உறைந்திருப்பது வியப்பாக உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.