ஐநா மனித உரிமைகள் பேரவையின் 30-வது அமர்வு அதன் ஆணையர் செயித் அல் ஹுசெய்ன் தலைமையில் இன்று ஜெனீவாவில் தொடங்குகின்றது.
அடுத்தமாதம் 2-ம் திகதி வரையான மூன்று வாரங்கள் நடக்கவுள்ள இந்த அமர்வின் முக்கிய நிகழ்வுகளாக- சிரியா மீதான விசாரணை ஆணையம், வடகொரியாவின் மனித உரிமை நிலவரம், உலக போதைப்பொருள் பிரச்சனை உள்ளிட்ட பேச்சுக்களோடு இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையும் வெளியிடப்படவுள்ளது.
2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரின்போது நடந்துள்ளதாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்த இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டியே ஐநாவின் மனித உரிமைகள் பேரவை, அந்தக் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான தீர்மானத்தை கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவேற்றியிருந்தது.
ஆனால், ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு நியமித்திருந்த விசாரணைக்குழு இலங்கைக்குள் செல்வதற்கு அப்போதைய மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அனுமதி கொடுக்கவில்லை,
இந்த நிலையில், இலங்கைக்கு வெளியிலிருந்தே அந்தக் குழுவினர் விசாரணைகளை நடத்தியிருந்தனர்.
இந்த விசாரணை அறிக்கை இந்த ஆண்டு மார்ச் மாத அமர்விலேயே வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த போதிலும், இலங்கையில் பதவியேற்றிருந்த புதிய அரசாங்கத்துக்கு காலஅவகாசம் கொடுப்பதற்காக இம்முறை செப்டெம்பர் மாத அமர்வு வரை இந்த அறிக்கை வெளியீடு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த விசாரணை அறிக்கையின் பிரதிகள் இலங்கை அரசாங்கத்தின் பதிலுக்காக ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கையிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
போர்க்கால குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணையே நடத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கமும் அறிவித்திருக்கின்றது.
2012,2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான மூன்று தீர்மானங்களையும் முன்னின்று கொண்டுவந்த அமெரிக்காவும், இலங்கையின் உள்ளக விசாரணை யோசனைக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று அண்மையில் கூறியிருந்தது.
இந்த பின்னணியிலேயே இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான உயர்மட்டக்குழு ஒன்று ஜெனீவா புறப்பட்டு சென்றிருக்கின்றது.
இப்போது நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இன்னும் சில தமிழர் தரப்புக் கட்சிகளும் தங்கள் பிரதிநிதிகளை ஜெனீவாவுக்கு அனுப்புகின்றன.