அஸ்ரப் ஏ சமத்
மனாருள் ஹுதா அரபுக் கல்லூரி மாணவர்கள் மூவர் எகிப்தில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான புலமைப்பரிசிலுக்கு தகுதி பெற்றுள்ளதுடன் மேலும் ஒருவர் மதீனா உம்முல் குரா பல்கலைக்கழகத்துக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குளியாபிட்டி, திவுரும்பொல ஜாமியா மனாருள் ஹுதா அரபுக்கல்லூரி மாணவர்களான நீர்கொழும்பைச் சேர்ந்த அல்ஹாபிழ் எம்.ஐ.எம். இன்பாஸ், கொழும்பைச் சேர்ந்த அல்ஹாபிழ் எம்.கே.எம். நாஸர் மற்றும் கொற்றமுல்லையைச் சேர்ந்த அல்ஹாபிழ் எம்.எஸ்.எம். இஷ்ரத் ஆகிய மாணவர்களே இவ்விதம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மனாருள் ஹுதா அரபுக்கல்லூரியில் சுமார் ஏழு வருடங்களாக மார்க்கக் கல்வியைப் பயின்ற நிலையில் முதுகலைமாணியை பூர்த்தி செய்வதற்காக இம்மாணவர்கள் மூவரும் எகிப்துக்கு செல்லவுள்ளனர்.
இதேவேளை, மதீனா உம்முல் குரா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக கொற்றாமுல்லையைச் சேர்ந்த அல்ஹாபிழ் மபாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்துக்கு வருடாந்தம் இலங்கை மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதுடன் எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கலை, முதுகலைமாணி படிப்பினை மேற்கொள்ள முடியும். அத்துடன் நான்கு வருட காலத்துக்கான சகல செலவுகளையும் எகிப்து பல்கலைக்கழகம் வழங்க உள்ளமை விசேட அம்சமாகும்.
சுமார் 300இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் மனாருள் ஹுதா அரபுக்கல்லூரியில் இருந்து வருடாந்தம் ஒரு மாணவர் எகிப்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகின்ற போதிலும் இம்முறை மூன்று மாணவர்களுக்கு பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
சுமார் 35 வருடமாக மார்க்கக் கல்வியில் முன்னணியில் திகழும் குளியாபிட்டி, திவுரும்பொல ஜாமியா மனாருள் ஹுதா அரபுக்கல்லூரியில் இருந்து பல மாணவர்கள் எகிப்துக்கு சென்று கலை, முதுகலைமாணியை கற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடக்கூடிய விடயமாகும்.