அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது!

சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுகின்ற அரசியலமைப்பு பேரவை, இன்று 10ஆம் திகதி வியாழக்கிழமை கூடவுள்ளது என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.
parliament

புதிய நாடாளுமன்றம் நியமனம் பெற்றதன் பின்னர் அரசியலமைப்பு பேரவை இன்றைய தினமே முதன்முறையாக கூடவிருக்கின்றது.

புதிய நாடாளுமன்றம் கூடியிருந்தாலும் அரசியலமைப்பு பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் இதுவரையிலும் நியமிக்கப்படவில்லை. எனினும், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு அமைவாக அரசியலமைப்பு பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படாவிட்டாலும் தற்போது செயற்படுகின்ற அரசியலமைப்பு பேரவைக்கு கூடுவதற்கு அதிகாரங்கள் இருக்கின்றன.

அதனடிப்படையில்  சிவில் பிரதிநிகள் இன்றியே, அரசியலமைப்பு பேரவையின் இன்றைய கூட்டம் கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவையானது 10 உறுப்பினர்களை கொண்டிருக்கும். இதில், சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் அதிகார பூர்வமாக பங்கேற்பர்.

ஜனாதிபதி தனது பிரதிநிதியாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை நியமித்துள்ளார். அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, பிரதமரின் பிரதிநிதியாக செயற்படுவார்.

அமைச்சர் டப்ளியு. டி.ஜே. செனவிரத்ன, கடந்த நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

அதற்கு அப்பால் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், சிறு கட்சிகளின் பிரதிநிதியாக அரசியலமைப்பு பேரவையில் அங்கம் வகிப்பார்.

இன்று கூடுகின்ற அரசியலமைப்பு பேரவையின் கூட்டத்தில் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தின் ஊடாக நிறுவப்படவிருக்கின்ற இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு உள்ளிட்ட 10 ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமித்தல் தொடர்பில் கலந்துரையாடப்படும்.

அரசியலமைப்பு பேரவைக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கு முன்னர், அந்த உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்க அழைக்குமாறு எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா மற்றம் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, நாடாளுமன்றம் எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் கூடவிருக்கின்றது.

அரசியலமைப்பின் பேரவையின் ஊடாக தேர்தல், அரச சேவை, பொலிஸ், கணக்காய்வு, மனித உரிமைகள், இலஞ்ச மற்றும் ஊழல், நிதி, எல்லை நிர்ணயம், தேசிய கொள்முதல் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்கு ஆகிய ஆணைக்குழுக்களுக்கே உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.