இந்திய அணி 2007 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளின் காலிறுதிப்போட்டிகளுடன் வெளியேறியதைத் தொடர்ந்து, அதே ஆண்டு இடம்பெற்ற டி20 உலகக்கிண்ண போட்டிகளுக்கு தோனி அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.
அது முதல் ஆரம்பித்த தோனியின் வெற்றிப்பயணம் 2011 ஆம் ஆண்டில் உலகக் கிண்ணத்தை 1983 ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்திய அணி உலகக்கிண்ணத்தை வென்றது வரை தொடர்ந்தது. எனினும் தற்போது இவரது தேவைப்பாடு இந்திய அணியில் குறைவடைந்துள்ளது எனலாம்.
கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியுடன் தோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கவாஸ்கர் – போர்டர் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பினை தோனி வெளியிட்டிருந்தார்.
எனினும் அதன் பின்னர் தொனி தொடர்ந்தும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என ஊகங்கள் வெளியிடப்பட்டன. ஆனாலும் இதுவரை தோனி அணியில் இடம்பெறவில்லை என்பதுடன் இலங்கை அணிக்கெதிரான தொடருக்கு விராத் கோஹ்லி தலைவராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியுடன் 22 வருடங்களின் பின்னர் டெஸ்ட் தொடரை வெற்றி கொண்டதன் பின்னர் டெஸ்ட் அணிக்கான தலைமை கோஹ்லியிடமே தங்கிவிடும் என்பது உறுதியானது.
தற்போது அணியின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு குறிப்பாக 2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை கருத்திற் கொண்டு ஒருநாள் போட்டிகளுக்கும் கோஹ்லியே அணித்தலைவராக நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்ட்டுள்ளது. ஏனெனில் 2019 ஆம் ஆண்டின் போது தோனிக்கு 38 வயதாக இருக்கும், எனவே அக்காலப்பகுதியில் அணித்தலைமையை கொண்டுசெல்வது கடினமான விடயமாக காணப்படலாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோஹ்லி தலைவராக நியமிக்கப்படும் பட்சத்தில் அது அவருக்கு மிகச்சிறந்த அனுபவத்தைஅளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. எனினும் நட்சத்திர வீரராக வலம் வந்த தோனி அணியிலிருந்து முற்றிலுமாக புறக்கணிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமன்று. ஏனெனில் தோனியின் சிறந்த தலைமைத்துவம் மற்றும் எடுக்கும் முடிவு என்பவை காரணமாக இந்திய அணி பல்வேறு போட்டிகளை வென்றது என்பது உண்மை.