மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நாளை உலக இந்தி மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
இந்தி மொழியின் புகழை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில் கடந்த 1975-ம் ஆண்டு முதல் உலக இந்தி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் 9-வது மாநாடு கடந்த 2012-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்தது.
அந்த மாநாட்டின் போது, அடுத்த மாநாட்டை இந்தியாவில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 10-வது உலக இந்தி மாநாடு மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நாளை தொடங்கி 3 நாள் நடக்கிறது.
இந்தி உலகம் விரிவாக்கமும், நோக்கமும் என்ற பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு தலைப்புகளின் கீழ் 24 அமர்வுகள் நடைபெறுகின்றன. இந்த மாநாட்டை வெளியுறவுத்துறை அமைச்சகமும், மத்திய பிரதேச அரசும் இணைந்து நடத்துகின்றன.
மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். மாநாட்டின் இறுதி நாளில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோர் இந்தி மொழி தொடர்பான தலைப்புகளில் உரையாற்றுகின்றனர்.