அசாஹீம்
மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் பதவி சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினருக்கே வழங்கப்பட வேண்டும் என புத்தி ஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தற்போதைய அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர்களை தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தை யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கு வழங்கியுள்ளனர்.
உண்மையிலே மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் பதவி என்பது சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டியது. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராஜாவும், வன்னியில் சிவசக்தி ஆனந்தனும், மட்டக்களப்பில் சீ.யோகேஸ்வரன் என்பவருமே நியமிக்கக் கூடிய நிலை உள்ளது.
இவர்கள் மூவரும் தங்கள் மாவட்டங்களில் முதன்மை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகா விட்டாலும் நீதி நியாயத்தின் படி இவர்களே நியமிக்கப்பட வேண்டும். ஆகவே தமிழினத்தின் பெருந்தலைவரும், எமது இனத்தின் விடுதலைக்காக இராஜதந்திர முறையில் அரசியல் தீர்வை பெற்றுத் தரும் பாதையில் சென்று கொண்டிருப்பவரும், எமது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்து இன்று எதிர்கட்சி தலைவராக பதவியேற்று எம் இனத்தை தலை நிமிர வைத்த பெருமகனான மாண்புமிகு இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் இந் நீதி, நியாயங்களையே பின்பற்றி இவ்மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் பதவியை வழங்குவார் என எதிர்பார்க்கின்றோம்.
இன்று இலங்கைப் பாராளுமன்றத்திலும், முதல் இரண்டு பெரும்பாண்மை பெற்ற கட்சிகள் அரசாங்கத்தை அமைத்ததனால் மூன்றாவது பெரும்பான்மை ஆசனம் பெற்ற கட்சிக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற நீதி, நியாயத்தின் அடிப்படையில் சபாநாயகர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்கியுள்ளார்.
இந்தவகையில் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என புத்தி ஜீவிகளும், பொது அமைப்புக்களும் வேண்டுகோள் விடுப்பதுடன், வடமாகாணத்தில் எவ்வாறு இந்நியமனம் நடைபெறுகின்றதோ அதேவகையில் கிழக்கு மாகாணத்திலும் இந்நியமனம் நடைபெற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாண்புமிகு தலைவருக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.