இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார அண்மையில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் இங்கிலாந்தின் கவுன்டி அணியான சர்ரே அணிக்காக இவர் விளையாடி வருகிறார்.
ராயல் லண்டன் ஒருநாள் கிண்ணத்துக்கான அரையிறுதி போட்டி ஒன்றில் சர்ரே அணி நாட்டிங்காம்ஷைர் அணியுடன் நேற்று மோதியது. இதில் சர்ரே அணி நாணயசுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதில் சங்கக்கார 3-வது நபராக களம் இறங்கினார். 138 பந்துகளில் 13 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 166 ஓட்டங்களை அதிரடியாக குவித்தார். இதனால் அந்த அணி 50 ஓவர்களை எதிர்கொண்டு 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 300 ஓட்டங்களை பெற்றது.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நாட்டிங்காம்ஷைர் 50 ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 296 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியது.
இந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.