அகதிகளுக்காக வாங்கும் தீவுக்கு கடலில் மூழ்கிய சிறுவன் அய்லானின் பெயரை சூட்ட எகிப்து கோடீஸ்வரர் முடிவு !

உள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறார்கள். அவர்களை ஏற்க சில நாடுகள் மறுத்து வருகின்றன.

aylan-oben_1441305048-1024x576_Fotor_Collage_Fotor
மத்திய தரைக்கடல் வழியாக கள்ளத்தனமாக செல்லும் போது படகுகள் கடலில் மூழ்கி ஏராளமான அகதிகள் மரணம் அடைகின்றனர். ஹங்கேரியில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்லவிடாமல் அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். சிரியா அகதிகளுக்கு இது போன்று பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன.

எனவே, அவர்களுக்கு நிம்மதியான மகிழ்ச்சிகரமான வாழ்வை அமைத்து கொடுக்க எகிப்து நாட்டை சேர்ந்த நகுய்ப் சாகுரிஸ் என்ற கோடிஸ்வரர் முன்வந்துள்ளார். கிரீஸ் அல்லது இத்தாலியில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதில் சிரியா அகதிகளை குடியேற்ற திட்டமிட்டுள்ளார்.

தான் விலைக்கு வாங்கும் அந்த தீவில் அகதிகள் தங்க வீடுகள் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்கி தரவும் முடிவு செய்துள்ளார். இது ‘ஜோக்’ அல்ல. அல்லல்படும் அந்த மக்களுக்கு தான் மனமுவந்து இந்த உதவி செய்ய தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்காக கிரீஸ் அல்லது இத்தாலி நாடுகள் தனக்கு ஒரு தீவை விலைக்கு விற்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பயந்து சிரியாவின் கொம்பானி நகரில் இருந்து கடந்த ஆண்டு துருக்கி சென்ற அப்துல்லா குர்தி என்பவர், தனது மனைவி ரெஹான், மூத்த மகன் காலிப்(வயது 5), இளைய மகன் அய்லான்(3) ஆகியோருடன் கனடா நாட்டில் அடைக்கலம் புக அனுமதி கேட்டார். அது நிராகரிக்கப்பட்டது. இதனால் கிரீஸ் நாட்டுக்கு கள்ளப்படகில் சென்று அங்கிருந்து ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் தஞ்சம் புகுந்தவிடலாம் என்று கருதினார்.

துருக்கி கடல் பகுதியில் மனைவி குழந்தைகளுடன் திருட்டு படகில் பயணம் செய்வதற்காக மூன்றரை லட்சம் ரூபாயை(5860 அமெரிக்க டாலர்) அப்துல்லா குர்தி கொடுத்து இருக்கிறார். பாதுகாப்பற்ற கடல் பயணத்தை மேற்கொண்டபோதுதான் அப்துல்லா குர்தி தனது மனைவி குழந்தைகளை கடந்த வாரம் ராட்சத கடல் அலைகளுக்கு காவு கொடுக்க நேர்ந்தது. அதுவும் பிஞ்சுக் குழந்தை அய்லான் கடற்கரையில் முகம் புதைந்த நிலையில் பிணமாக கிடந்த புகைப்படம் உலகையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது.

இந்த சம்பவத்துக்கு பின்னர், இரண்டே நாட்களில் அகதிகளாக வந்தேறும் மக்களுக்கு நான் இடம் தருகிறேன், நானும் இடம் தருகிறேன் என ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் போட்டிப் போட்டுக்கொண்டு முன்வந்துள்ளன.

இந்நிலையில், அகதிகளுக்காக வாங்கவுள்ள தீவுக்கு பலியான சிரியா சிறுவன் அய்லானின் பெயரை சூட்ட இத்தாலிய கோடீஸ்வரர் நகுய்ப் சாகுரிஸ் தீர்மானித்துள்ளார்.

எகிப்து நாட்டில் பிரபல தொலைத்தொடர்பு நிறுவன அதிபராக இருக்கும் இவரது சொத்து மதிப்பு சுமார் 300 கோடி அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அகதிகளுக்காக நான் வாங்கும் தீவுக்கு சமீபத்தில் அகதியாக புகலிடம் தேசி துருக்கி நாட்டு கடலில் மூழ்கி கரை ஒதுங்கிய சிறுவனின் நினைவாக ‘அய்லான் தீவு’ என பெயரிட முடிவு செய்துள்ளேன். அந்த தீவு எங்கே உள்ளது? என்பதை இனிதான் நான் தேட வேண்டும் (“I found a name for the Island ‘ILAN’ [sic] the young Syrian child thrown on Turkish shore by the sea to remind us! Now I need to find the island!”) என தனது டுவிட்டர் பக்கத்தில் நகுய்ப் குறிப்பிட்டுள்ளார்.