(VIDEO) சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்த பென் ஸ்டோக்ஸ் !

 ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகின்றது. முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் (10 ஓட்டங்கள்) சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார்.

 

Ben-out

26 ஆவது ஓவரை அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டார்க் வீசிய போது, அதை பென் ஸ்டோக்ஸ் எதிர்கொண்டார். 4 ஆவது பந்தை நேராக அடித்து விட்டு சில அடி தூரம் ஓடினார். அதற்குள் பந்து வீசிய மிச்செல் ஸ்டார்க்கே பிடித்தார். ஸ்டோக்சை ரன் அவுட் செய்வதற்காக ஸ்டம்பை நோக்கி மின்னல் வேகத்தில் பந்தை எறிந்தார். உடனே சுதாகரித்து திரும்பிய பென் ஸ்டோக்ஸ் ஸ்டம்பை நெருங்கிய சமயத்தில், இடது கையை ஸ்டம்புக்கு குறுக்காக நீட்ட பந்து அவரது கையில் பட்டு விழுந்தது.

அவரும் ‘டைவ்’ அடித்து கிரீசுக்குள் பாய்ந்தார். அவர் வேண்டுமென்றே பந்தை தடுத்து விட்டார், இல்லாவிட்டால் ரன்-அவுட் ஆகியிருப்பார் என்று அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் சக வீரர்கள் முறையிட்டனர். அவுட் கொடுக்க மறுத்த கள நடுவர்கள் தர்மசேன மற்றும் டிம் ரொபின்சன் ஆகியோர் 3 ஆவது நடுவரை அணுகினர். டி.வி. ரீ பிளேயில் பென் ஸ்டோக்சின் செயல்பாட்டை ஆராய்ந்த 3 ஆவது நடுவர் ஜோயல் வில்சன், ஸ்டோக்ஸ் அவுட் என்று அறிவித்தார்.

பீல்டிங்குக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பந்தை வேண்டுமென்றே துடுப்பாட்ட வீரர் தடுத்தால் அவருக்கு அவுட் வழங்க சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் (ஐ.சி.சி.) விதியில் இடம் உண்டு. சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இவ்வாறு 7 வீரர்கள் ஆட்டம் இழந்திருக்கிறார்கள். இதில் ஒரு டெஸ்ட் வீரரும் அடங்குவார்.
இங்கிலாந்தின் லியோனர்ட் ஹட்டன் 1951 ஆம் ஆண்டு தென்ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்டின் போது இந்த முறையில் விக்கெட்டை பறிகொடுத்திருக்கிறார்.

பாகிஸ்தானின் அன்வர் அலி, முகமது ஹபீஸ், இன்சமாம் உல்-ஹக், ரமீஸ் ராஜா, இந்தியாவின் மொகிந்தர் அமர்நாத் ஆகியோரும் இத்தகைய சர்ச்சையில் ஆட்டம் இழந்தோர் பட்டியலில் இருக்கிறார்கள். அவுஸ்திரேலிய வீரர்கள் முறையீடு செய்ததும் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கனுக்கு இது எரிச்சலை ஏற்படுத்தியது. பென் ஸ்டோக்ஸ், பந்து தன்னை தாக்கி காயம் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக கையால் தடுத்தார் என்று வாதிட்டார். அதை அவுஸ்திரேலியர்கள் பொருட்படுத்தவில்லை. இந்த விவகாரம் குறித்து அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் கூறுகையில்,

https://www.youtube.com/watch?v=3Nsq6ALU4UM

‘எங்களது விக்கெட் காப்பாளர் மத்யூ வேட், ‘பந்தை பென் ஸ்டோக்ஸ் தடுத்திருக்காவிட்டால் அது நேராக ஸ்டம்பை தாக்கியிருக்கும். அவர் ரன்-அவுட் ஆகியிருப்பார்’ என்று சொன்னார். எனது பார்வையிலும் அப்படித்தான் தோன்றியது. ஸ்டோக்சின் செயல்பாட்டை நீங்களும் பார்த்தால், பந்து நேராக ஸ்டம்பை நோக்கி செல்வது தெரியும். அவர் கையால் தடுத்திருக்காவிட்டால் பந்து அவர் மீது பட்டு இருக்காது. வேண்டுமென்றே பந்தை தடுத்து நிறுத்தியதால் தான், விதிப்படி அவருக்கு நடுவர் அவுட் வழங்கியிருக்கிறார்’ என்றார்.

இங்கிலாந்து அணித்தலைவர் மோர்கன் கூறும் போது, ‘பென் ஸ்டோக்சை நோக்கி பந்துவேகமாக எறியப்பட்டது. இவ்வாறான சூழலில் இத்தகைய வழியில் தான் நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். அவர் வேண்டுமென்றே பந்தை தடுத்ததாக நினைக்கவில்லை. கள நடுவர் தர்மசேனவும், அவர் அவுட் மாதிரி தெரியவில்லை என்று என்னிடம் கூறினார். ஆனால் 3 ஆவது நடுவர் அவுட் கொடுத்து விட்டார்’ என்றார்.