நேபாளத்தில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பூமியதிர்ச்சியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,800 இற்கும் அதிகமாக உயர்வடைந்துள்ளது. இந்த பூமியதிர்ச்சியை தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தில் சுமார் 80 வருடங்களின் பின்னர் மிக மோசமான பூமியதிர்ச்சி நேற்று சனிக்கிழமை காலை ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 7.8 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சி தலைநகர் காத்மண்டுவுக்கும் போக்ஹாரா நகருக்கும் இடையிலான மத்திய நேபாளப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த பூமியதிர்ச்சியின்போது 1,805 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4,718 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு உட்துறை அமைச்சின் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து பல நாடுகளும் சர்வதேச தொண்டு நிறுவனங்களும் உதவிப் பொருட்களை வழங்கியுள்ளன.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். 1934ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்டிருந்த மிக மோசமான பூமியதிர்ச்சியில 8,500 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.