‘அரசாங்கத்தின் இந்தப் பயணம் தொடருமா? சுயநலவாத அரசியலில் ஈடுபடுகின்ற கும்பல்கள் இடமளிக்குமா? : அமைச்சர் ஹக்கீம் !

‘அரசாங்கத்தின் இந்தப் பயணம் தொடருமா? நாங்கள் எதிர்பார்க்கும் இலக்கை நோக்கி நாட்டை கொண்டு செல்வதற்கு சுயநலவாத அரசியலில் ஈடுபடுகின்ற கும்பல்கள் இடமளிக்குமா? என்ற சந்தேகம் எங்களுக்குள் மட்டுமல்ல, நாட்டு மக்கள் மத்தியிலும் நிலவத்தான் செய்தது. அதற்கு ஆப்பு வைத்தால் போலவும், ஆணி அறைந்தால் போலவும் ஜனாதிபதியினதும், பிரதமரினதும் உரைகள் அமைந்திருந்தன. அவற்றில் மக்களின் சந்தேகங்களுக்கு தெளிவான பதில் கிடைத்தது விட்டது’.

rauff

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் திங்கள்கிழமை (07) முற்பகல் பத்தரமுல்ல, பெலவத்தையில் அமைந்துள்ள தமது அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்க வருகை தந்தபோது அளிக்கப்பட்ட வரவேற்பு வைபவத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

அங்கு உரையாற்றும்பொழுது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,

நடந்து முடிந்த எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு ஓரு மக்கள் ஆணை கிடைத்திருக்கின்றது. அதில் பாராளுமன்றத்தில் முழுமையான பெரும்பான்மைப் பலத்தை பெற்றுக் கொள்வதில் இருந்த குறைபாட்டை இந்நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தேசிய அரசாங்கத்தை நிறுவியதன் மூலம் சாதித்திருக்கின்றார்கள்.

11949144_1717822525117755_4924171235465257978_n

யுத்தத்திற்குப் பிந்திய காலகட்டத்தில் முழு சர்வதேசமும் எதிர்பார்த்த விதத்தில் இணக்க அரசியலொன்றை முன்கொண்டு செல்வதற்கான சாத்தியமான தீர்மானத்தை மேற்கொண்டுள்ள இச்சந்தர்ப்பத்தில், ஜனவரி 08ஆம் திகதி பெற்றுக் கொண்ட ஆரம்ப வெற்றியின் பயனாக பல பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டிய கடமை எங்களைப் போன்ற அமைச்சர்களுக்கு உள்ளது.

10430449_1717825328450808_3192821557117133166_n

ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரில் எமது கட்சியின் சார்பு போட்டியிட்ட வேட்பாளரின் வெற்றிக்கு ஒத்துழைத்தவர்களுக்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். இந்தப் பாராளுமன்றத்தில் எமது உறுப்பினர்கள் ஏழு பேர் அங்கம் வகிக்கின்றோம். எங்கள் மீது ஜனாதிபதியும், பிரதமரும் வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் பேணிப்பாதுகாப்போம்.

ஜனவரி 08ஆம் திகதி வெற்றிக்கு மாதுலுவாவே சோபித்த தேரரின் அமைப்பு உள்ளிட்ட ஏனைய சிவில் அமைப்புகள் கூடுதலான பங்களிப்பை செய்துள்ளார்.

11954676_1717822115117796_546164874050333352_n

ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் 69வது மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உணர்வு பூர்வமான, கருத்தாழமிக்க உரைகளை நிகழ்த்தினர். அதன் பின்னர், ஜனாதிபதி அவர்களே, ‘நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரின் உள்ளங்களோடும், உணர்வுகளோடும் உரையாடினீர்கள்’ என நான் அவரிடம் கூறினேன்.

உண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியினரின் கண்களில் கண்ணீர் மல்குமளவிற்கு அவரது உரை அமைந்திருந்தது.

rauff

இந்தப் பயணம் தொடருமா? நாங்கள் எதிர்பார்க்கும் இலக்கை நோக்கி நாட்டை கொண்டு செல்வதற்கு சுயநலவாத அரசியலில் ஈடுபடும் கும்பல்கள் இடமளிக்குமா? என்ற சந்தேகம் எங்களுக்குள் மட்டுமல்ல, நாட்டு மக்கள் மத்தியிலும் நிலவத்தான் செய்தது. அதற்கு ஆப்பு வைத்தால் போலவும், ஆணி அறைந்தால் போலவும் ஜனாதிபதியினதும், பிரதமரினதும் உரைகள் அமைந்திருந்தன. அவற்றில் மக்களின் சந்தேகங்களுக்கு தெளிவான பதில் கிடைத்தது. அவ்வாறு தான் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்த வெள்ளிக்கிழமை அன்று ஜனாதிபதி ஆற்றிய உரையும் அமைந்திருந்தது.

நாட்டுக்கு தேவையானது ஸ்திரமான அரசாங்கம். அதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. ஐந்து ஆண்டுகளுக்கு ஸ்திரமான அரசாங்கத்தை இணக்க அரசியலினூடாக கொண்டு செல்ல முடியுமென்பது திடமான நம்பிக்கையாகும்.

கடந்த ஆட்சிக்காலத்தில் நாங்கள் தேவையில்லாமல் பகைத்துக் கொண்ட மேற்கு நாடுகள் இப்பொழுது எங்களது உள்ளக முரண்பாடுகளுக்கும், பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளைக் காண்பதில் ஒத்துழைப்பதற்கு இணக்கம் தெரிவித்திருப்பது ஒரு திருப்பு முனையாகும். நாங்கள் எதிர்பாராத விதத்தில் எங்களுக்கு உதவுவதற்கு மேற்கு நாடுகள் முன்வந்திருப்பதை இந்த மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை மாநாட்டின் செயலமர்வின் போது தெரிந்து கொள்ளலாம். கடந்த ஐந்து மாதங்களாக இந்த விவகாரம் சூடுபிடித்திருந்தது. 2012ஆம் ஆண்டில் நான் ஜெனீவாவில் அப்பொழுது இந்த விவகாரத்திற்காக நீதியமைச்சர் என்ற முறையில் ஒரு மாதகாலம் தங்கியிருந்து செயலாற்ற நேர்ந்தது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது எவ்வாறான திசையில் சர்வதேச சமூகம் இலங்கை விவகாரத்தை அணுகியதென்பது எனக்கு நன்றாகத் தெரிந்தது.

அவ்வாறான நிலைமையை மாற்றி, இந்நாட்டு அரசாங்கத்தின் இருப்பை தக்கவைப்பதற்காக இப்பொழுது இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேசம் ஒருவிதமான நெகிழ்வுத் தன்மையை கடைப்பிடிக்க முன்வந்திருப்பதும் ஒரு முன்னேற்றகரமான நிலைப்பாடாகும். இவ்வாறான யுகம் முன்னர் இருந்ததில்லை.

இன்னொரு முக்கியமான விடயமாக, வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற நடைமுறைக்கு அமைவாக எதிர்கட்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மற்றும் சபாநாயகர் நடந்து கொண்டமை அமைகிறது. அதாவது எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்களை நியமித்தமை இன நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்களின் வரவேற்புக்குரியதாகும். அதையும் குழப்புவதெற்கென்று ஒரு கும்பல் இருந்தது. ஆனால் அந்தச் சிறிய கும்பல் தோற்றுவிட்டது.

எங்களது பயணம் நீண்டது. அது நாட்டை நிச்சயமாக முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும்.

நாட்டின் குடிநீர்ப் பிரச்சினை தீர்ப்பதற்கும், நகர நிர்மாணங்களை முன்னெடுப்பதற்குமான அமைச்சுப் பொறுப்பு மீண்டும் எனக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அத்துடன், அடுத்த கோடைகாலத்திற்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது பற்றியும் நாம் நன்கு திட்டமிட்டு செயலாற்ற இருக்கின்றது.

நெல் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்துவதில் எனது கட்சி பெரிதும் பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண மக்கள் குறிப்பாக அம்பாரை மாவட்ட மக்கள் மிகவும் பிரச்சினைக்குள்ளாகியிருக்கின்றார்கள். அது தொடர்பிலும் நாம் உரிய கவனம் செலுத்தி விவசாயிகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் முனைப்புக் காட்டி வருகின்றோம் என்றார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமத், முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரீ.ஹஸனலி, பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர் பொறியலாளர் கருணாசேன ஹெட்டிஆராச்சி மற்றும் அமைச்சின் அதிகாரிகள், ஊழியர்கள், நாடெங்கிழுமிருந்து வந்திருந்த கட்சி ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜெம்சாத் இக்பால்
ஊடக உதவியாளர்