இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
1977ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைராக செயற்பட்டதன் பின்னர், தற்போதே தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுகின்றார் என மு.கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் நினைவூட்டியுள்ளார்.
தங்களது வாழ்க்கையில் விடிவுகாலம் ஏற்படாதா என இலங்கை தமிழர்கள் எதிர்பார்த்திருந்த தருணத்தில், இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் தெரிவாகியுள்ளமை நம்பிக்கை அளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இலங்கை தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்கவும் அவர்களுக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொடுக்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபடும் என இரா.சம்பந்தன் கூறியுள்ளமை, மகிழ்ச்சி அளிப்பதாகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான
இரா.சம்பந்தனுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.