தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டது. இந்த வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை பகல் 12.11க்கு ஆரம்பமாகி 13.42க்கு நிறைவுக்கு வந்தது. இந்த பதவியேற்பு வைபவத்தில் இடம்பெற்ற சில சுவாரசியமான சம்பவங்கள்…
வருகை
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பாரியாரும் 12.10க்கு வருகைதந்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 12.11க்கு வருகைதந்தார். 12.12க்கு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பின்னர் 12.15க்கு உறுப்பினர்கள் எழுந்து நின்று உறுதிமொழி செய்துகொண்டனர்.
நீண்டநேரம் பதவிப்பிரமாணம்
பதவிப்பிரமாணம் செய்துகொள்வதற்காக ஜனாதிபதிக்கு முன்பாக சென்ற உறுப்பினர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட பதவிப்பிரமாண கையேட்டிலிருந்தவற்றை அவசர அவசரமாக வாசித்தனர்.
எனினும், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ, ஏனைய உறுப்பினர்களை விட சில நிமிடங்கள் எடுத்து நிதானமாக தெளிவாக வாசித்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
தமிழ் மொழியில் உறுதிப்பிரமாணம்
மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம், புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம், இந்து அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் ஆகிய மூவரும் தமிழ் மொழியில் உறுதிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
உறுதிப்பிரமாணத்தை வாசிக்காதவர்
ஜனாதிபதியின் செயலாளருக்கு முன்பாக இருந்த கோவையை எடுக்கும் உறுப்பினர்கள் அதிலிருக்கும் தங்களுக்குரிய விடயதானத்தை வாசித்ததன் பின்னர், அதில் கையொப்பமிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பர். அதன் பின்னர் ஜனாதிபதி கையளிக்கும் ஆவணத்தை பெற்றுக்கொள்வர். எனினும், பெற்றோலிய மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சந்திம வீரக்கொடி, கோவையிலிருந்தவற்றை வாசிக்காமல் ஜனாதிபதியிடம் கையளித்தார். இதனை அவதானித்த ஜனாதிபதி, கியவுவே நெத என்று சிங்களத்தில் கேட்டார் (வாசிக்கவில்லையா)அதன் பின்னரே அவர், உறுதிப்பிரமாணத்தை வாசித்தார்.
கலந்துரையாடலை ஆரம்பித்த அமைச்சர்
அமைச்சர்களாக நேற்று வெள்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் செய்துக்கொண்ட 42 உறுப்பினர்களில் சிலர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பார்த்து வணக்கம் செலுத்தினர், சிலர் தலையை மட்டும் அசைத்துவிட்டு சென்றனர் இன்னும் சிலர் புன்முறுவல் பூத்தனர். ஆனால், தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் மட்டும் பிரதமரிடம் ஏதோ கலந்துரையாடிவிட்டு வந்தார். சுட்டிக்காட்டிய செயலாளர் ஆவணத்தில் எவ்விடத்தில் கையொப்பமிடவேண்டும் என்பது தொடர்பில் தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சற்று தடுமாறிவிட்டார். ஹரினுக்கு முன்பாக இருந்த ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ அபயகோன், கையொப்பம் இடவேண்டிய இடத்தை சுட்டிக்காட்டினார். அதன்பின்னர் அவர் கையொப்பம் இட்டார்.
ஆங்கிலத்தில் உறுதிப்பிரமாணம்
பெரும்பான்மையின உறுப்பினர்கள் சிங்கள மொழியிலும் சிறுபான்மையின தமிழ் உறுப்பினர்கள் தமிழ்மொழியிலும் உறுதிப்பிரமாணம் செய்துகொண்டனர். எனினும், நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் மற்றும் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்ஸிம் மத விவகார அமைச்சர் அப்துல் அலீம் முஹமட் ஹாசீம் ஆகியோர் ஆங்கில மொழியில் உறுதிப்பிரமாணத்தை வாசித்தனர்.
கைக்கூப்பி வணக்கிய அமைச்சர்
ஆரம்பக் கைத்தொழில் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட தயா கமகே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமர்ந்திருந்த மேசையின் மீது தன்னுடைய கோவையை வைத்துவிட்டு பிரதமருக்கு வணக்கம் செலுத்தினார். வேறு எந்தவொரு அமைச்சரும் இவ்வாறு வணக்கம் செலுத்தவில்லை.
இருவர் சுணக்கம்
அமைச்சரவை சத்தியப்பிரமாண நிகழ்ச்சி நிரலில் பிரகாரம், நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சராக பதவியேற்பதற்காக ரவூப் ஹக்கீம் 13.16க்கு அழைக்கப்பட்டார். அந்த நேரத்தில் அவர் பிரசன்னமாய் இருக்கவில்லை. எனினும், 13.41க்கு மண்டபத்துக்கு வருகைதந்த அவர், நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பின்னர் அமைச்சர் அப்துல் அலீம் முஹமட் ஹாசீம் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்ஸிம் மத விவகார அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார். அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதுடன் பதவிப்பிரமாண வைபவம் நிறைவுற்றது.