மனைவியும், குழந்தைகளும் என் கைகளில் இருந்தபோதே மரணத்தை தழுவி விட்டனர் !

சிரியாவில் பலியான இரு சிறுவர்கள் மற்றும் அவர்களது தாயின் சடலங்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டன.

புதனன்று துருக்கிய கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டவர்களில் இவர்களும் அடங்குகிறார்கள்.

‘ஐ.எஸ். தீவிரவாதிகளை சும்மாவிடமாட்டேன், நாடு திரும்பி அவர்களுக்கு எதிராக சண்டையில் குதிப்பேன்’ என்று கடலில் பலியான பிஞ்சுக் குழந்தையின் தந்தை அப்துல்லா குர்தி கூறிஉள்ளார்.  
 ailan siriya
சிரியாவின் உள்நாட்டுப்போர், அந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி விட்டது. அவர்களில் பலரும் தங்கள் மீதியான வாழ்க்கையை கழித்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமான நிலையில், அண்டை நாடான துருக்கி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் அகதிகள் பிரச்சினையை ஐரோப்பிய நாடுகள் தீராத தலைவலியாக கருதுகின்றன. இந்நிலையில் துருக்கியில் கடலில் பலியாகிக்கிடந்த குழந்தை அய்லான் படம், உலகையே உலுக்கி விட்டது. இதனையடுத்து ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாட்டிலும் சற்று மாற்றம் வந்துஉள்ளது. 
siriya
குழந்தை அய்லானின் தந்தை முதலில் கனடாவிடம் அடைக்கலம் கேட்டு உள்ளார் என்ற தகவல் வெளியாகிஉள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குலுக்கு பயந்து சிரியாவின் கொம்பானி நகரில் இருந்து கடந்த ஆண்டு துருக்கி சென்ற அப்துல்லா குர்தி என்பவர், தனது மனைவி ரெஹான், மூத்த மகன் காலிப்(வயது 5), இளைய மகன் அய்லான்(3) ஆகியோருடன் கனடா நாட்டில் அடைக்கலம் புக அனுமதி கேட்டார். அது நிராகரிக்கப்பட்டது. இதனால் கிரீஸ் நாட்டுக்கு கள்ளப்படகில் சென்று அங்கிருந்து ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் தஞ்சம் புகுந்தவிடலாம் என்று கருதினார்.
11938061_10153086289452864_2050759793347349406_n
துருக்கி கடல் பகுதியில் மனைவி குழந்தைகளுடன் திருட்டு படகில் பயணம் செய்வதற்காக 3.5 லட்சம் ரூபாயை அப்துல்லா குர்தி கொடுத்து இருக்கிறார். பாதுகாப்பற்ற கடல் பயணத்தை மேற்கொண்டபோதுதான் அப்துல்லா குர்தி தனது மனைவி குழந்தைகளை ராட்சத கடல் அலைகளுக்கு காவு கொடுக்க நேர்ந்தது. அதுவும் பிஞ்சுக் குழந்தை அய்லான் கடற்கரையில் முகம் புதைந்த நிலையில் பிணமாக கிடந்த புகைப்படம் உலகையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. 
முதலில் அப்துல்லா குர்திக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்த கனடா அரசு, தற்போது அய்லானின் மரணக் காட்சியைப் பார்த்தும், எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலுக்கும் பதறிப்போய் அவருக்கு அடைக்கலம் கொடுக்க முன் வந்துள்ளது. ஆனால், அப்துல்லா குர்தி கனடாவின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார். 
அப்துல்லா குர்தி பேசுகையில், எனது மனைவிதான் இந்த உலகம். அவள் இல்லாமல் எதுவுமே கிடையாது. மனைவியும், குழந்தைகளும் என் கைகளில் இருந்தபோதே மரணத்தை தழுவி விட்டனர். தற்போது, எனது இளைய மகன் இறந்த புகைப்படக் காட்சியை பார்த்து எனக்கு அடைக்கலம் தருவதாக கனடா அரசாங்கம் கூறுகிறது. இதை நான் ஏற்கப் போவதில்லை. எனது குடும்பத்தையே இழந்துவிட்டேன். இனி நான் கனடா சென்று வாழ்வதால் எதுவும் ஆகிவிடாது. என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய ஐ.எஸ். தீவிரவாதிகளை சும்மாவிடமாட்டேன். நாடு திரும்பி அவர்களுக்கு எதிராக சண்டையில் குதிப்பேன்.என்று கூறிஉள்ளார்.