இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்பெறச் செய்வதற்காக மிகவும் அமைதியான முறையில் வெற்றிகரமாக பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டமை மற்றும் அதற்காக பங்களிப்பு வழங்கியமைக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் சர்வதேச இந்து – பௌத்த மாநாட்டில் பங்குபற்றியுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் அந்த நாட்டு பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடையே நேற்று (03) சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு தலைமைத்துவம் வழங்கிய காலகட்டத்தில் இந்தியா – இலங்கைக்கு இடையிலான தொடர்புகள் வலுப்பெறுவதற்காக ஆற்றிய பங்களிப்பையும் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இனப் பிரிவுகளும் எதிர்பாபர்க்கின்ற உண்மையான நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்கும், முன்னாள் ஜனாதிபதியின் முயற்சிகள் நம்பிக்கையளிப்பதாகவும் இந்திய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் தொன்றுதொட்டு நிலவிவருகின்ற வரலாற்று மற்றும் கலாசார ரீதியான தொடர்புகளுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் வழங்கிவருவதாக இதன்போது நரேந்திர மோடி நினைவூட்டியுள்ளார்.
இந்த நிலைமையின் கீழ், இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நெருங்கிய தொடர்புகளை பேணுவதன் மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை புதிய பரிணாமத்திற்கு கொண்டுசெல்ல எதிர்ப்பார்ப்பதாகவும் இந்திய பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.