கட்சி முறையை பாதுகாப்பதோடு தேசிய அரசாங்கமாக இணைந்து செயற்பட்டு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – பிரதமர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணத்தின்படி நாட்டுக்கு தேசிய அரசியல் கொள்கை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

Ranil

அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

நாட்டுக்கு மாற்றம் என்ற மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். 

அதனை நிறைவேற்ற நாம் நடவடிக்கை எடுக்காவிடின் மக்களின் எதிர்பார்ப்பு வீணாகும் என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். 

தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி பெறாதவர்கள் பாராளுமன்ற மட்டத்தில், மாவட்ட, மாகாண மட்டத்தில் அமைக்கப்படும் நிர்வாகக் குழுக்களில் அங்கம் வகித்து தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு அளிக்க முடியும் என பிரதமர் தெரிவித்தார். 

தேசிய அரசாங்கம் என்பது உலக அளவில் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர் காலங்களில் ஏற்படுத்தப்படும் என்றும் ஆனால் ஜேர்மன் போன்ற நாடுகளில் தற்போதும் பிரதான இரண்டு கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்துள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். 

இலங்கையிலும் கட்சி முறையை பாதுகாப்பதோடு தேசிய அரசாங்கமாக இணைந்து செயற்பட்டு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் கூறினார்.