ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைக்கவுள்ள தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று காலை 11 மணியளவில் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்கவுள்ளது.
இரண்டு பிரதான கட்சிகளை யும் கொண்ட தேசிய அரசாங்கத்தில் 48 அமைச்சரவை அமைச்சர்களும் 45 பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் இன்று பதவியேற்கவுள்ளனர். 48அமைச்சரவை அமைச்சுக்களில் 33அமைச்சுப் பதவிகள் ஐக்கிய தேசிய கட்சிக்கும் 15 அமைச்சுக்கள் சுதந்திரக் கட்சிக்கும் வழங்கப்படவுள்ளன.
மேலும் 45 பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகள் இரண்டு கட்சிகளுக்கும் பகிரப்படவுள்ளன. இது தொடர்பில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் சுற்றாடல் துறை உள்ளிட்ட ஒரு சில அமைச்சுப் பதவிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமே இருக்கும். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் பிரகாரம் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
நிதியமைச்சராக ரவி கருணாநாயக்க நியமிக்கப்படவுள்ள நி்லையில் அதிலிருந்த வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் வேறாக பிரிக்கப்பட்டு கபீர் ஹஷீமுக்கு வழங்கப்படவுள்ளன. மேலும் ஹரீன் பெர்னாண்டோ எம்.பி. க்கு தொலைத் தொடர்புகள் அமைச்சும் ஹலீம் எம்.பி. க்கு தபால் அமைச்சும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சம்பிக்க ரணவக்கவுக்கு மெகா பொலிஸ் அமைச்சும் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக்கவுக்கு ஏற்கனவே இருந்த ஊடகத்துறை அமைச்சுப் பதவியும் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு நெடுஞ்சாலைகள் அமைச்சுப் பதவியும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜித்த சேனாரட்னவுக்கு சுகாதார அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது. சஜித் பிரேமதாசவுக்கு வீடமைப்பு அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதுடன் அவர் ஏற்கனவே வகித்த சமுர்த்தி அமைச்சு சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் துமிந்த திசாநாயக்கவுக்கு விவசாய அமைச்சும் சரத் அமுனுகமவுக்கு உயர் கல்வி அமைச்சுப் பதவியும் வழங்கப்படவுள்ளன. துமிந்த திசாநாயக்கவுக்கு விவசாய அமைச்சுப் பதவியும் எம்.கே.டி.எஸ். குணவர்த்தனவுக்கு புத்தசாசன அமைச்சுப் பதவியும் வழங்கப்படவுள்ளது. அர்ஜுன ரணதுங்கவுக்கு துறைமுகங்கள் அமைச்சு கிடைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சுப் பதவி்களை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்குவதில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இதுவரை இறுதி இணக்கப்பாடு எட்டப்படாமையே அமைச்சரவை பொறுப்பேற்கும் செயற்பாடு இழுபறியில் நீடிப்பதற்கு காரணமாக இருந்தது. விசேடமாக நிதியமைச்சு ஊடகத்துறை அமைச்சு உள்ளிட்ட சில முக்கிய அமைச்சுக்களை சுதந்திரக் கட்சி கோரி வந்தது.
எனினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதற்கு இணங்காமையின் காரணமாக இழுபறி நிலை நீடித்து வந்தது. இறுதியில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற முககிய பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த விவகாரத்துக்கு தீர்வு காணப்பட்டது.
அந்தவகையில் எட்டாவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 18 ஆம் திகதி வெளியிடப்பட்டன. கடந்த 21 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றார். எனினும்இரண்டு வாரங்களின் பின்னரே தற்போது அமைச்சரவை பதவியேற்கின்றது.
ஐக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீம், மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
அந்தவகையில் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்காக தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இணங்கியுள்ளன.