இலங்கை இனப்படுகொலை குறித்த அமெரிக்காவின் முடிவு, வரலாற்று நிகழ்வுகளைத் திரித்திடும் முயற்சி என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேள்வி:- இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் குறித்து, விசாரணை நடத்தும் பொறுப்பினை, அந்தப் படுகொலைகளுக்குக் காரணமான இலங்கை அரசிடமே ஒப்படைக்கப்போவதாக அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறதே?
பதில்:- இது குறித்து, ஐக்கிய நாடுகளின் மன்றம் அமைத்த மூவர் குழுவினர் நடத்திய விசாரணையின் மூலம் இலங்கையிலே தமிழ் இனப்படுகொலை நடந்தது உண்மை என்பது வெளிப்பட்டது. 2014 ஆம் ஆண்டு மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்க அரசு கொண்டு வந்த தீர்மானம், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரிக்க சுதந்திரமான, நம்பகமான சர்வதேச விசாரணைக் குழு அமைக்கக் கோரியது.
தற்போது அமெரிக்க அரசின் முடிவு, நடந்து முடிந்த தமிழ் இனப் படுகொலையை முழுமையாக மூடி மறைத்து, போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசிடமே ஒப்படைக்க முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. அண்மையில் இலங்கைக்கு வந்துள்ள தெற்கு ஆசியாவுக்கான அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் இதனை வெளிப்படுத்தியிருக்கிறார் என்ற செய்தி வந்துள்ளது.
இந்தச் செய்தி உண்மையாகிவிடக் கூடாதென்றே நான் விரும்புகிறேன்; மாறாக, உண்மையாக இருக்குமானால், வரலாற்று நிகழ்வுகளைத் திரித்திடும் அமெரிக்க அரசின் இந்த முயற்சியை திமுக வின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.