பழுலுல்லாஹ் பர்ஹான்
கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள், முன்னால் உறுப்பினர்கள் 21 பேர் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
இதில் 08 பேர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை எமது கிழக்கு மாகாண சபைக்கு பெரும் கௌரவமாகும் விசேடமாக கிழக்கு மாகாண கல்வி, காணி, அமைச்சராக கடந்த ஆறரை வருடங்களாக பதவி வகித்த திரு. விமல வீர திஸாநாயக்கா பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவராக இருந்த போதிலும் கடந்த 03 தசாப்த காலமாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண கல்வித்துறையை கட்டி எழுப்புவதற்கும், நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த தமிழ் பேசும் மக்களின் காணிப்பிரச்சினைகளுக்கு தன்னால் முடிந்தளவு உதவியதுடன், கிழக்கு மாகாண இன ஒற்றுமைக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த 14 உறுப்பினர்கள் ஒன்றிணைந்து முதலமைச்சருக்கு ஆதரவு வழங்கினோம்.
எங்களின் ஆதரவைப் பெற்று விட்டு எங்களை ஏமாற்றினார்கள் இதனால் தனக்கு மாகாண கல்வி அமைச்சுப் பதவி 03வது தடவையும் காலடிக்கு வந்த போதும் பங்காளிக் கட்சியான தேசிய காங்கிரஸூக்கு கிழக்கு மாகாண சபை அமைச்சரவையில் அமைச்சுப் பதவி கிடைக்காததால் தனக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியை தியாகம் செய்தார். அமைச்சுப் பதவிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளுக்காக வன்முறைகள், கொலைகள் கூட நடந்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் கொள்கைக்காகவே தனது அமைச்சுப்பதவியை தூக்கி எறிந்தார்.
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு முதலாவது தெரிவு வாக்குப் பெற்று பாராளுமன்றம் சென்றுள்ள திரு.விமல வீர திஸாநாயக்கா நமது கிழக்கு மாகாண மக்கள் என்றும் மறந்து விட முடியாதுள்ளது என கிழக்கு மாகாண சபையின் அமர்வு பிரதித் தலைவர் திரு.இந்திர குமார் பிரசன்னா தலைமையில் நடைபெற்ற போது கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக வாழ்த்து தெரிவிக்கும் பிரேரனையில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும், உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்…..
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான எம்.ஐ.மன்சூர், அலிசாஹிர் மௌலானா, திரு. தயா கமகே, இம்றான் மஹ்ரூப், எம்.ஐ.அமீர் அலி, எம்.எ.மஃறூப், எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்கள்.
இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நமது கிழக்கு மாகாண மக்களின் நலன்களில் பணி புரிய நாம் வாழ்த்துகின்றோம். இவர்களின் பணிகள் தேசிய மட்டத்தில் இன ஒற்றுமைக்கும், எதிர்கால அரசியல் தீர்வுக்கும், அபிவிருத்திக்கும் பாரிய பங்களிப்பினை வழங்கும் என நம்புகின்றோம்.
இறைவன் நாடுகின்றவர்களுக்குத்தான் அரசியல் அதிகாரங்களை வழங்குகின்றான். கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களில் சிலருக்கு தேசியல் பட்டியல் ஊடாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கவுள்ளதாக பத்திரிகைகள் வாயிலாக அறிய முடிகின்றது. அந்த எதிர்பார்ப்புடன் உள்ள நமது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பு கிடைத்து மக்கள் பணி புரிய நாம் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் கிழக்கு மாகாண சபையில் உணர்ச்சிவசப்பட்டு பேசுகின்ற போதெல்லாம் நான் பல தடவைகள் அவருக்கு வெளிப்படையாகவே எனது ஆலோசனைகளை வழங்கியிருக்கின்றேன்.
கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக திரு.தயா கமகே பதவி வகித்தாலும், நமது நாட்டின் தேசியக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக பதவி வகிக்கின்றார்.
எதிர்காலத்தில் திரு.தயா கமகே பாராளுமன்றம் சென்று மத்திய அமைச்சரவையில் அமைச்சராகி அம்பாறை மாவாட்ட மக்களுக்கு பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் எனவே, திரு.தயா கமகேவின் செயற்பாடுகள் தேசிய மட்டத்தினை நோக்கிய வகையில் அமைய வேண்டும் என அன்று தெரிவித்தேன். இன்று அவர் தேசிய மட்டத்தில் உயர்ந்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் 04 ஐக்கிய தேசியக் வேட்பாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெறுவதற்கு திரு.தயா கமகேயின் செயற்பாடுகளே பிரதான காரணமாகும் எனக் குறிப்பிட்டார்.