ஜவ்பர்கான்
இந்த நாட்டில் நல்ல ஒரு அரசாங்கம் வந்தது போன்று இந்த நாட்டில் உள்ள மதங்களுக்கிடையிலும் நல்லதொரு இணக்கப்பாடு ஏற்படுத்தவேண்டும் என மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.
இந்த நாட்டில் நல்ல ஒரு அரசாங்கம் வந்தது போன்று இந்த நாட்டில் உள்ள மதங்களுக்கிடையிலும் நல்லதொரு இணக்கப்பாடு ஏற்படுத்தவேண்டும் எதிர்காலத்தில் இந்த நாட்டில் கலவரங்கள்,யுத்தங்கள் ஏற்படாத வகையிலான அத்திவாரங்கள் அடிமட்டத்தில் இடவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் தேசிய ரீதியிலான இனங்களுக்கிடையான சமயங்களுக்கிடையிலான கிறிஸ்தவ சபைகளுக்கிடைலான ஒருங்கிணைப்புசபை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம் ஆகியவற்றுக்கிடையிலான கலந்துரையாடல் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் தேசிய ரீதியிலான இனங்களுக்கிடையான சமயங்களுக்கிடையிலான கிறிஸ்தவ சபைகளுக்கிடைலான ஒருங்கிணைப்புசபையின் உறுப்பினர்களான கொழும்பு மறை மாவட்ட துணை ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ,இரத்தினபுரி மறை மாவட்ட ஆயர் கிலிஸ்டன் பெரேரா ஆண்டகை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்சமய ஒன்றி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இந்த நாட்டில் இனங்களிடையே ஏற்பட்டுள்ள இடைவெளியியை குறைக்கும் வகையில் அடிமட்ட மக்கள் மத்தியில் இருந்து இனஒற்றுமையை ஏற்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது.
குறிப்பாக கடந்த 30வருடமாக இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள சந்தேகத்தினை தீர்க்கும் வகையில் புதிய அரசாங்கத்திற்கு தேவையான உதவிகளை வழங்குவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
வெறுமனே இனவொற்றுமையினையும் சமூக ஒருமைப்பாட்டினையும் கூட்டங்கள் ஊடாகவும் மாநாடு ஊடாகவும் கொண்டுசெல்வதை விட கிராமம்கிராமமாக அடிமட்ட மக்களிடம் கொண்டுசெல்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பது எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை,இனங்களுக்கிடையிலான மதங்களுக்கிடையிலான சபைகளுக்கிடையிலான நல்லிணக்கத்தினை ஏற்படுத்தவேண்டும்.அது மகாநாடுகளிலோ,கூட்டங்களிலோ மட்டும் நிற்ககூடாது.அது அடிமட்டத்திற்கு கொண்டுசெல்லப்படவேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும்.அதனையே இன்றை கூட்டத்தில் தீர்மானமாக எடுத்தோம்.
இந்த நாட்டில் புதிய அரசாங்கம் வந்துள்ளது.நல்லதொரு எதிர்காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் காலடி எடுத்துவைத்துள்ளோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் பல இனங்கள் பல மதங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர்.அனைவரும் ஒன்றிணைந்துவாழும் மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இருக்கின்றது.இந்த மாவட்டத்தில் அடிமட்டத்திற்கு கொண்டுசெல்லவேண்டும்.ஒவ்வொரு வீடுகளுக்கும் பாடசாலைகளுக்கும் தெருக்களுக்கும் சென்று கலந்துரையாடுவதன் மூலம் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்துசெல்லவேண்டும்.