ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் “மஹிந்த” சார்ந்த குழுவினர் புதிய அணியொன்றை ஏற்படுத்தி பாராளுமன்றத்தில் தனித்துவமான எதிர்க்கட்சியாக செயல்படப் போவதாக ?தூய்மையான ஹெல உறுமயவின் தலைவரும் எம்.பி.யுமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
விரைவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் வெற்றிலைச் சின்னமும் காணாமல் போய்விடுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக உதய கம்மன்பில மேலும் தெரிவிக்கையில்,
பொது ஜன ஐக்கிய முன்னணிக்கும் அதன் கதிரைச் சின்னத்திற்கும் நடந்த கதியே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் வெற்றிலைச் சின்னத்திற்கும் ஏற்படவுள்ளது. இன்று இம்முன்னணியிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறி ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து தேசிய அரசு அமைக்கவுள்ளது.
அத்தோடு தேர்தல் முடிந்த பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சித் தலைவர்கள் கூட்டமோ மத்திய செயற்குழுவோ கூட்டப்படவில்லை. திட்டமிட்டு வேண்டுமென்றே கூட்டங்கள் கூட்டப்படாமல் உள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை இல்லாதொழிக்க முடியாது. ஏனென்றால் 95 எம்பிக்கள் 300 க்கு மேற்பட்ட மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் வெற்றிடம் ஏற்படும்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரால் தான் வெற்றிடம் நிரப்பப்பட வேண்டும்.
தேர்தல்கள் ஆணையாளரும் இதனையே ஏற்றுக் கொள்வார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இது தொடர்ந்தால் பொது ஜன ஐக்கிய முன்னணிக்கு ஏற்பட்ட கதியே உருவாகும். இவ்வாறானதோர் சூழ்நிலையில் தினேஷ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, எமது தூய்மையான ஹெல உறுமய சமசமாஜக்கட்சி கம்யூனிஸ கட்சி என அனைத்து கட்சிகளும் இணைந்து பொது எதிர்கட்சியாக செயற்பட தீர்மானித்துள்ளோம்.
நாமனைவரும் பாராளுமன்றத்தில் பொது எதிர்கட்சியாக செயற்படவும் தீர்மானித்துள்ளோம். எதிர்கட்சித் தலைவர் யாரென்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம்.
ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி சர்வதிகாரியாகி செயற்படுகின்றார்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர்களையும் ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி நீக்கினார்.எனவே எதிர்கட்சித் தலைவரையும் ஜனாதிபதி தனக்குள் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி நியமிக்கும் நிலைமை தோன்றலாம் என்றார்.