எனது தோல்வியினை பக்குவமாக ஏற்றுக்கொள்கின்றேன் -பா.அரியநேத்திரன்

tna
ஜவ்பர்கான்

அரசியலை சினிமாபோன்று சித்தரித்துள்ளனர்.புதிய நடிகர்களை வைத்து புதிய படத்தினை தயாரிக்கும்போது கூடிய வசூலைபெறுகின்ற பாணியாக இந்த அரசியல் நிலைமையை பார்த்துள்ளார்கள்.அதற்கு அடிப்படை காரணமாக இருந்தவர் எங்கள் பொதுச்செயலாளர். எனது முடிவினை நான் பக்குவமாக ஏற்றுக்கொண்டுள்ளேன் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தேர்தல் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 84 கருத்தரங்குகளை நடாத்தியிருந்தேன்.நான் அவற்றில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்யவேண்டும் என்றே கூறியிருந்தேன்.தமிழ் மக்கள் அனைவரும் அதற்காக வீட்டுக்கு வாக்களிக்கவேண்டும்.அது தமிழ் மக்களின் தேசிய கடமை.
நான் இரண்டு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன்.என்மீது அதிர்ப்தி இருக்குமானால் எனக்கு வாக்களிக்கவேண்டாம் என நான் தெளிவாககூறியிருந்தேன். ஆனால் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என கூறியிருந்தேன்.அந்தவகையில் தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர்.

என்னைப்பொறுத்தவரையில் 21306 விருப்பு வாக்குகள் எனக்கு கிடைத்துள்ளது.அதிலும் பட்டிருப்பு தொகுதியில் அதிகளவான விரும்புவாக்குகள் எனக்குத்தான் கிடைத்துள்ளது.அது தொடர்பில் நான் திருப்தி அடைகின்றேன்.

என்னைப்பொறுத்தவரையில் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலை நாங்கள் எதிர்கொள்ள தயாராகவுள்ளோம்.நாங்கள் மூன்று பேரும் அந்த தேர்தலில் தமிழரசுக்கட்சியின் வெற்றிக்காக உழைப்போம்.எதிர்வரும் காலத்தில் நடக்கும் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எமது ஆட்சேபனையினை தெரிவிக்கவிருக்கின்றோம்.

தேசிய பட்டியல் உறுப்பினராக வரவேண்டும் என்று நான் யாரிடமும் கேட்கவும் இல்லை.ஆனால் எனது ஆதரவாளர்கள் எல்லோரும் வழங்கியதுபோல் விண்ணப்பத்தினை வழங்கியுள்ளனர்.தேசிய பட்டியல் கிடைக்கவில்லையென்ற கவலையோ,பாராளுமன்ற உறுப்பினர் கிடைக்கவில்லையென்ற கவலையோ எனக்கு இல்லை.தமிழரசுக்கட்சியின் வெற்றிக்காக உழைப்பேன்.

தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுமாறு கோரினால் அது தொடர்பில் நான் பரிசீலிப்பேன்.மாகாணசபை தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை.2016ஆம் ஆண்டு அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.அவ்வாறு கிடைத்தல் மாகாணசபை தேர்தல் நடைபெறாது.

எங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.கட்சியின் செயலாளர் புதியவர்,பழையவர்கள் என்ற கருத்தினை தெரிவித்துள்ளார்கள்.அவர்கள் அரசியலை சினிமாபோன்று சித்தரித்துள்ளனர்.புதிய நடிகர்களை வைத்து புதிய படத்தினை தயாரிக்கும்போது கூடிய வசூலைபெறுகின்ற பாணியாக இந்த அரசியல் நிலைமையை பார்த்துள்ளார்கள்.அதற்கு அடிப்படை காரணமாக இருந்தவர் எங்கள் பொதுச்செயலாளர். எனது முடிவினை நான் பக்குவமாக ஏற்றுக்கொண்டுள்ளேன்.