இலங்கை மற்றும் அமெரிக்க நாடுகளுக்கிடையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகளை நடைமுறைக்கு கொண்டுவருவதே எமது சந்திப்பின்நோக்கம் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
அமெரிக்க பிரதிநிதி நிஷா பிஷ்வாலுடனான சந்திப்பின் போது நல்லாட்சிக்கான வேலைத்திட்டம் மற்றும் நாட்டின் சுயாதீன நீதிச்சேவை, மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பிலான அடுத்தகட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை வந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வாலுடன் நேற்று இரு தரப்பு சந்திப்பை நடத்திய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வெளிவிவகார அமைச்சில் இச்சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் பின்னர் அமைச்சர் சமரவீர தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்;
கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாட்டில் ஏற்பட்ட மாற்றத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னை வெளிவிவகார அமைச்சராக நியமித்துள்ளார்.நான் வெளிவிவகார அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் எனது உத்தியோக பூர்வ சந்திப்பினை அமெரிக்க இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வாலுடன் மேற்கொண்டுள்ளேன், இந்த சந்திப்பானது இரு நாடுகளுக்கு இடையிலான உறவினை பலப்படுத்தும் வகையில் அமையப் பெற்றுள்ளது. குறிப்பாக முன்னைய காலங்களில் நாம் ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வு மற்றும் உடன்படிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வது தொடர்பில் நாம் இருதரப்பினரும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தோம்.
கடந்த மே மாதம் அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கேரி இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த நிலையில் அவருடனான பேச்சுவார்த்தையின் போது பல வெற்றிகரமான முன்னேற்றங்களை கண்டிருந்தோம். அதை தொடரும் வகையில் இப்போது இரண்டாம் கட்டமாக இந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். கடந்த காலங்களில் வெறுமனே பேச்சுவார்த்தைகளில் மாத்திரமே இரு நாடுகளின் செயற்பாடுகளும் நகர்ந்தன. ஆனால் பேச்சுவார்த்தைகளை செயற்பாடுகளாக ,மாற்றும் வகையிலேயே இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
மேலும் நாட்டில் சுயாதீனமான தேர்தல் நடவடிக்கைகள் நடைபெற வேண்டும் எனவும், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியிருந்தார்.
அதற்கமைய இம்முறை அமைதியானதொரு தேர்தல் நடைபெற்றுள்ளது. அதேபோல் கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்திருந்த நல்லாட்சிக்கான வேலைத்திட்டம் மற்றும் நாட்டின் சுயாதீன நீதிச்சேவை, மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பிலான அடுத்தகட்ட வேலைத்திட்டங்களை இன்றைய பேச்சுவார்த்தையில் நாம் கலந்துரையாடினோம்.
மேலும் இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பொருளாதார நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானதாகும். இரண்டு நாடுகளும் மிகவும் நெருக்கமான பொருளாதார உறவினை பேணி வருகின்றன. இலங்கையின் ஏற்றுமதியில் அதிக பங்கு அமெரிக்காவை சார்ந்தே உள்ளது. இலங்கையின் மொத்த ஏற்றுமதி சந்தையில் 23 வீத பங்கினை அமெரிக்காவே பெறுகின்றது. எனவே நாம் எமது வர்த்தக உறவினை மேலும் பலப்படுத்தவும் இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார அபிவிருத்தியை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமெரிக்க முதலீட்டார்கள் வரவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இலங்கை மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையில் மிகவும் நெருக்கமான உறவுகள் இருந்து வருகின்றன. அந்த உறவினை மேலும் பலப்படுத்தும் வகையில் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என்றார்.