இந்தியா – பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து : மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு !

 

india-pak_20

 இந்தியா-பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையே டெல்லியில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பிரிவினைவாதிகளுடனான சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்புதல் போன்ற பாகிஸ்தானின் நிலைப்பாட்டுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் ரத்து செய்தது.        

பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது. இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியிருப்பதாவது:-        

தெளிவற்ற திட்டமிடல், உகந்த தயாரிப்பின்மை, தெளிவற்ற தூதரக உறவுகள் ஆகியவற்றால் துரதிர்ஷ்டவசமாக பேச்சுவார்த்தை விவகாரத்தை பாகிஸ்தானின் கைகளில் மத்திய அரசு விட்டு விட்டது. இந்த பேச்சுவார்த்தையில் இருந்து விலக பாகிஸ்தானுக்கு வாய்ப்பு அளித்து விட்டது.         

இரு நாடுகளுக்கு இடையே சில பிரச்சினைகளிலாவது கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் பயன்களுக்கு, இந்த பேச்சுவார்த்தை ரத்தால் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. இதற்காக நாங்கள் வருந்துகிறோம்.         

இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக பாகிஸ்தான் வெளியிட்ட அறிக்கையில் இடம் பெற்றிருந்த ‘போலி’, ‘கட்டுக்கதை’ போன்ற வார்த்தைகள் ஆட்சேபகரமானது. வெளிநாட்டு கொள்கை மற்றும் சர்வதேச ராஜதந்திர நடவடிக்கைகளில் இது போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதை யாரும் பார்த்திருக்க முடியாது.        

தீவிரவாதம் தொடர்பான பேச்சுவார்த்தையை தடுக்க பல்வேறு நுணுக்கங்களை பாகிஸ்தான் கையாளுவது நிச்சயமாக தெரிகிறது. இதையும் நாங்கள் கண்டிக்கிறோம். எனினும் தீவிரவாதம் போன்ற முக்கியமான பேச்சுவார்த்தையில் இருந்து பாகிஸ்தான் விலகுவதற்கு மத்திய அரசு வாய்ப்பு வழங்கியிருக்கக்கூடாது.        

இவ்வாறு அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.