ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 3 அமெரிக்கர்கள் உட்பட 12 பேர் பலி !

 0dd7a1ed-dd8e-4a8d-a383-6c273313ff9e_S_secvpf

 ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் மீண்டும் நாட்டை தங்கள் வசம் கொண்டு வருவதற்காக அங்கு பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ள நேட்டோ படையினர் மீதும், ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் மீதும் அவ்வப்போது தற்கொலை படை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக அமெரிக்க படையினரை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகிறது.        

இதே போன்ற தாக்குதல் நேற்று முன்தினம் தலைநகர் காபூலில் நடந்தது. அங்குள்ள ஒரு மருத்துவமனைக்கு அருகே நேட்டோ படையினர் தங்களது வாகனங்களில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு காரில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பிய தனது காரை வெடிக்க செய்தான். இந்த தாக்குதலில் அந்த வழியாக சென்று கொண்டிருந்த பள்ளி வாகனம் உள்பட ஏராளமான வாகனங்கள் வெடித்து சிதறின. இதனால் அந்த வாகனங்கள் பலத்த சேதமும் அடைந்தன.         

தீவிரவாதிகளின் இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே நேட்டோ ஒப்பந்ததாரர்கள் 3 பேர் உள்பட 12 பேர் உடல் சிதறி பலியாகினர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். கொல்லப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மூவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.        

இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அமெரிக்க படையினரை குறிவைத்து தலீபான் தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதால் இந்த தாக்குதலையும் அவர்களே நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும், இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்று தலீபான்கள் மறுத்து உள்ளனர். காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.         

இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டாலும் கூட ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவதற்கு அமெரிக்கா எல்லா வகையிலும் தொடர்ந்து உதவி செய்யும் என்று கூறப்பட்டு உள்ளது.