”நாட்டு மக்களின் சுக துக்கங்களை அறிய வேண்டியது ஒரு தலைவனின் கடமை” – கிண்ணியாவில் ஜனாதிபதி

Maithri3
FILE IMAGE

நாட்டு மக்களின் சுகதுக்கங்களை அறிய வேண்டியது ஒரு தலைவனின் கடமை என்பதால் அதனை அறிந்து கொள்வதற்காக இங்கு கிண்ணியாவிற்கு வந்தேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

இன்று சனிக்கிழமை பகல் கிண்ணியா மத்திய கல்லூரி அப்துல் மஜீது மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். 

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், முன்னாள் அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.எம்.மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப், தயாகமகே, முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் உட்பட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது: 

8 மாதங்களுக்கு முன்னர் நான் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக இங்கு வந்தேன். 

அப்போது இப்பகுதி முழுவதும் பெரு வெள்ளத்தினால் மூழ்கியிருந்தது. 

நீங்கள் மிகவும் கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தீர்கள். 

அவ்வாறான ஒரு சூழ்நிலையில் நீங்கள் உங்கள் வாக்குகள் மூலம் அமோக வெற்றியை எனக்குத் தந்தீர்கள். 

நீங்கள் அழைப்பு விடுத்து இன்று நான் இங்கு வரவில்லை. 

அன்று எனக்கு வாக்களித்து வெற்றியைப் பெற்றுத் தந்த உங்களை சந்தித்து உங்களது சுக துக்கங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இங்கு நான் வந்தேன். 

நீங்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகத் தான் எனக்கு அன்று வாக்களித்தீர்கள். 

இன்று இங்கு வந்து உங்களை பார்க்கும் போது நீங்கள் சந்தோசமாக இருப்பதை அறிகின்றேன். 

இப்பகுதிக்குத் தேவையான அபிவிருத்திகளை தர வேண்டியது எனது பொறுப்பாகும். 

அதற்காக நான் உங்கள் தலைவர்களோடு இணைந்து செயற்பட்டு வருகின்றேன். 

அண்மையில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் நீங்கள் உங்கள் புதிய தலைவர்களை தெரிவு செய்து அனுப்பியுள்ளீர்கள். 

ஜனவரி 8ம் திகதி தந்த வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் பலமான பாராளுமன்றம் அமைய இந்த தேர்தலை நீங்கள் பயன்படுத்தியுள்ளீர்கள். 

நேற்று நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார். 

அதனை நீங்கள் ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்பீர்கள். 

இன்னும் சில தினங்களில் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது. 

எனவே, இந்த புதிய அரசின் மூலம் நாங்கள் இந்நாட்டைக் கட்டியெழுப்ப திடசங்கற்ம் பூண்டுள்ளோம். 

இங்கு வாழ்கின்றவர்கள் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்பது முக்கியமல்ல. 

அனைவரும் சகோதரர்கள் என்ற அடிப்படையில் வாழ வேண்டியது தான் முக்கியம். அதற்காகன ஏற்பாடுகளை நாங்கள் செய்து வருகின்றோம். 

பிள்ளைகளுக்கு நல்ல கல்வி பெற்றுக் கொடுக்கப்பட வேண்:டும். சுகாதார மற்றும் ஏனைய துறைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அந்த அபிவிருத்தியை இந்தப் பகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபை ஊடாக நாம் முன்னெடுத்துச் செல்வோம். 

மாவட்ட, பிரதேச ரீதியாக குழுக்களை அமைத்து அதன் மூலம் உங்களுக்கு அதிகாரங்களை கையளிக்க உள்ளோம். 

இது நாட்டின் சகல பகுதிகதிளிலும் இது நடைமுறைப்படுத்தப்படும். இதில் சகல மக்கள் பிரதிநிதிகளும் உள்ளடக்கப்பட்டிருப்பார்கள். இதன் மூலம் இப்பிரதேச பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும். 

இவ்வாறு ஜனாதிபதி கூறினார். 

இங்கு பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளை செவி மடுத்த ஜனாதிபதி அவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுத் தருவதாகவும். வாக்குறுதி அளித்தார்.