பொதுத் தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஒரு வாரத்திற்குள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய வெற்றியீட்டிய கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க
கூறியுள்ளார்.
இதேவேளை, பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்களின் பட்டியல்களை மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரிகள் இன்னும் ஓரிரு தினங்களில் தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிப்பார்கள் எனவும்
அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்களின் பெயர்கள் தேர்தல் முடிவுகள் அடங்கிய பட்டியல்கள் மற்றும் தேசிய பட்டியல் மூலம் கட்சிகள் சார்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விபரம் கிடைத்ததும்
அதனை வர்த்தமானியில் அறிவிப்பதற்கு தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகளுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சிக்கு 93 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 83 ஆசனங்களும் கிடைத்தன.
இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் இம்முறை 14 பேர் தேர்தலமூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்
மக்கள் விடுதலை முன்னணி நான்கு ஆசனங்களை கைப்பற்றியது.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகயவற்றுக்கு தலா ஒரு ஆசனம் கிடைத்தது.
அத்தோடு ஐக்கிய தேசியக் கட்சிக்கு 13 தேசியப் பட்டியல் ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திக் கூட்டமைப்புக்கு 12 தேசியப் பட்டியல் ஆசனங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகயவற்றுக்கு தலா இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன.