தாஜகான்
பொத்துவிலின் வடக்குப் புறமாக உள்ள 25 ஏக்கர் அரச காணியில் 2015.08.17 நேற்று இரவோடு இரவாக இரண்டு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலையளவில் பிரதான வீதியால் சென்ற மக்கள் பெரும் அதிர்ச்சியுடன் அதனை பார்வையிட்டனர். இச்செயற்பாடானது முஸ்லிம்கள் செறிந்து வாழும் பொத்துவில் பிரதேசத்தில் இனக்கலவரத்தை ஏற்படுத்தும் செயற்பாடாக பாரக்ப்படுகிறது. உரியவர்கள் இச்சிலையினை அகற்ற நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
மூன்றடி உயரத்தில் புத்தர் சிலையும், பிள்ளையார் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப்பணி இரவு ஆரம்பிக்கப்பட்டு அதிகாலைக்குள் முடிவடைந்துள்ளது.
இக்காணியானது 2000 ம் ஆண்டு காலம் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி.அஸிஸ் அவர்களினால் மைதான புனர்நிர்மானத்திற்காக வேண்டி பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு புனர்நிர்மானம் செய்யப்பட்டது.
2010 ம் ஆண்டு பொத்துவில் பிரதேச சபையினால் பொது மைதானம் சீரமைக்கப்பட்டது. இச்சந்தர்பத்தில் உகந்தை கோவில் நிருவாகத்தினரும், இன்னும் சிலரும் அக்காணிக்கு வாய்மொழி மூலம் உரிமை கோரியிருந்தனர்.
பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முசர்ரத் அவர்கள் இக்காணிக்குரிய உரிமையினை வாய்மொழிமூலம் இல்லாமல் ஆவணங்களுடன் 2015.05.05 முன்னர் பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்குமாறு நோட்டிஸ் இடப்பட்டது. அவ்வறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் கடந்த நிலையில் எவராலும் உரிமை கோரப்படவில்லை. இவ்வேளை இரவு அத்துமீறி கலாசார மதச்சின்னத்தை கொண்ட சிலைகளை வைத்துள்ளார்கள்.
பொத்துவில் பொதுமக்கள் அங்கு சென்ற பொழுது பிரச்சினை எழாமல் மக்களை அமைதிப்படுத்தி ஊரின் அரசியல்வாதிகள் , இளைஞர்கள், புத்திஜீவிகள் அவதானமாக செயற்படுகின்றனர். பொலிஸ் பொறுப்பதிகாரி உபுல் செனவிரத்ன, ஏ.எஸ்.பி. ஜெயரத்ன ஆகியோர் நீதிமன்றத்தின் மூலம் தீர்ப்பினை எடுப்பதற்காக முயற்சிக்கின்றனர். பொத்துவில் மக்கள் பொறுமையோடு பொத்துவில் பிரதேச சபையின் முன்னிலையில் அமைதியாக நின்று கொண்டிருக்கின்றார்கள்.
கடந்த மகிந்த அரசாங்கத்தில் பிரதேச சபையினை மதிக்காமல் பல சிலைகளை பொத்துவில் பிரதேசங்களில் ஆங்காங்கே வைத்தவர்கள் இச்செயற்பாட்டின் பின்னணியில் இருக்கலாம் என மக்கள் சந்தேகம் கொள்கின்றனர்.
பல்லாண்டு காலமாக ஒற்றுமைப்பட்டு வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள உறவு நிலை பாதிப்படையாத வகையில் இதற்குரிய தீர்வினை அரசாங்க அதிகாரிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.