கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்ட தேசியக் கொடிகள் பயன்படுத்தப்பட்டன. இச் செயலுக்காக நாம் கவலையடைவதோடு மன்னிப்பையும் வேண்டி நிற்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்ட தேசியக் கொடியை ஆர்ப்பாட்டக்காரர்கள் பயன்படுத்தியமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் டலஸ் அழகப்பெரும மற்றும் உதய கம்பன்பில ஆகியோர் இருந்தமை காணொளிகள் மூலம் தெரிய வந்தது.
இந்நிலையில் இச் செயலுக்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மன்னிப்பு கோரியுள்ளார்.
இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்களின் போது இவ்வாறான செயல்கள் இடம்பெறாமல் இருக்க நாங்கள் பொறுப்புடன் செயற்படுவோம். மேலும் இச் செயலினால் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த யாரும் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தால் மன்னிப்பையும் கோருகின்றோம் என்றார்.