Facebook
WhatsApp
Viber
Twitter
Print
முதல்–அமைச்சர் ஜெயலலிதா சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பின்னர் பல்வேறு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அவரிடம் இருந்து விருதுகள் பெற்றவர்கள் விவரம் வருமாறு:–நல் ஆளுமை விருதுகள் சென்னை மாநகராட்சி அம்மா உணவகங்களுக்கு வழங்கப்பட்டது. அதை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மேயர் சைதை துரைசாமி, முதன்மை செயலாளர் பணிந்திர ரெட்டி, மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ரூ.2 லட்சத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
தமிழக அரசின் பொது சேவை மையத்திற்கான விருதை அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், முதன்மை செயலாளர் ராமச்சந்திரன், அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குனர் குமரகுருபரன், இயக்குனர் நாகராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.பார்த்தசாரதி கோவில் புணரமைப்பு திட்டத்தில் ஈடுபட்டவர்களுக்காக நல் ஆளுமை விருதினை அமைச்சர் காமராஜ், முதன்மை செயலாளர் கண்ணன், அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி ஆகியோர் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து சான்றிதழ் மற்றும் ரூ.2 லட்சத் திற்கான காசோலையை பெற்றுக் கொண்டனர்.மாற்று திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய சென்னை மருத்துவ கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் டாக்டர் சம்பத்குமாருக்கு சான்றிதழும், 10 கிராம் தங்க பதக்கமும் வழங்கப்பட்டது.இதே போல சிறந்த சமூக பணியாளர் பி.சிம்மசந்திரன் என்பவர் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை செய்ததற்கு சான்றிதழும், 10 கிராம் தங்க பதக்கமும் வழங்கப்பட்டது.மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக செயல்பட்ட சிறந்த தொண்டு நிறுவனமாக திருநெல்வேலியில் செயல்படும்‘ஸ்காட்’ நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதேபோல மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி அன்னை இல்லமும் சேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தது. இவற்றிற்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையும், 10 கிராம் தங்க மெடலும் வழங்கப்பட்டன.மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக செயல்படும் சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தேர்ந்து எடுக்கப்பட்டு இருந்தது. இதற்கான தங்க பதக்கத்தை அமைச்சர் செல்லூர் ராஜு, வங்கியின் தலைவர் இளங்கோவன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலை வாய்ப்பு அளித்த தனியார் நிறுவனமான பிலெக்ஸ்ட் ரானிக்ஸ் டெக்னாலஜி இந்தியா பிரைவேட் நிறுவனத்துக்கு தங்க பதக்கமும் கிடைத்தது. இதை கம்பெனியின் சீனியர் மானேஜர் பிரகாஷ் பெற்றுக் கொண்டார்.மகளிர் நலனுக்காக பணியாற்றிய சிறந்த நிறுவனமான ஸ்ரீவெங்கடேஸ்வரா காப்பகத்திற்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் 10 கிராம் தங்க பதக்கம் வழங்கப்பட்டது. இதனை விஸ்வநாதன் பெற்றுக் கொண்டார்.
இதே போல சிறந்த சமூக சேவகராக (மகளிர் நலம்) தேர்வு செய்யப்பட்ட கோவையை சேர்ந்த சிவகாமவள்ளிக்கு ரூ.50 ஆயிரம் காசோலை மற்றும் 10 கிராம் தங்க பதக்கம் வழங்கப்பட்டது.சிறந்த மாநகராட்சிக்கான விருது மதுரை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது. இதற்கான ரூ.25 லட்சம் காசோலை மற்றும் சான்றிதழை மேயர் ராஜன் செல்லப்பா, ஆணையாளர் கதிரவன் பெற்றுக் கொண்டனர். சிறந்த நகராட்சியாக புதுக்கோட்டை, மன்னார்குடி, கோபிசெட்டி பாளையம் ஆகியவை தேர்வு செய்யப்பட்டது. இதில் முதல் பரிசு புதுக்கோட்டை நகராட்சிக்கு கிடைத்தது. நகராட்சி சேர்மன் ராஜசேகர், ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோர் ரூ.15 லட்சத்திற்கான காசோலையை பெற்றுக் கொண்டனர்.2–வது பரிசுக்கு தகுதி பெற்ற மன்னார்குடி நகராட்சி தலைவர் சுதா, ஆணையாளர் மணி ஆகியோர் ரூ.10 லட்சத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழ் பெற்றனர்.3–வது இடம் பெற்ற கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கான ரூ.5 லட்சம் காசோலை, சான்றிதழை தலைவர் ரேவதி தேவி, ஆணையாளர் தனலட்சுமி ஆகியோர் பெற்றனர்.சிறந்த பேரூராட்சியாக முதலிடம் பெற்ற தரங்கம்பாடி பேரூராட்சிக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை தலைவர் கிருஷ்ணசாமி, நிர்வாக அதிகாரி சிவக்குமார் பெற்றனர்.2–வது இடம் பெற்ற திருவையாறு பேரூராட்சிக்கு வழங்கப்பட்ட ரூ.5 லட்சத்திற்கான காசோலையை தலைவர் செந்தில்மணி, நிர்வாக அதிகாரி மனோகர் பெற்றுக் கொண்டனர்.3–வது இடம் பெற்ற திருகமணி பேரூராட்சிக்கு வழங்கப்பட்ட ரூ.3 லட்சத்திற்கான காசோலை, சான்றிதழை தலைவர் செல்வம், நிர்வாக அதிகாரி பரமேஸ்வரி ஆகியோர் பெற்றனர்.இதைத் தொடர்ந்து முதல்– அமைச்சர் ஜெயலலிதா மனவளர்ச்சி குன்றிய, கை, கால்கள் பாதிக்கப்பட்ட, செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். அவர்கள் ஒவ்வொருவரையும் கை குலுக்கி வாழ்த்தினார்.
அதன் பின்னர் ஜெயலலிதா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.அப்போது சாலையின் இருபுறமும் திரண்டு இருந்த முக்கிய பிரமுகர்கள், பொதுமக்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.விழாவில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பி துரை, சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், ஐகோர்ட்டு நீதிபதிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.சுதந்திரதினத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Facebook
WhatsApp
Viber
Twitter
Print