இந்திய நாட்டின் 69 ஆவது சுதந்திர தினம் இன்று !!

images

இந்திய நாட்டின் 69 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

இதனையடுத்து, பிரதமர் மோடி உரையாற்றுகையில், நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருந்தால்தான் வளர்ச்சி மூலம் ஏழைகளை மேம்படுத்த முடியும் எனவும் ஊழலை ஒழிக்க உயர் மட்டத்தில் இருந்து பல நடவடிக்கைகள் எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்விழாவில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, பா.ஜ.க தலைவர் அமித்ஷா, கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

இதேவேளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் சென்னையிலுள்ள கோட்டை கொத்தளத்தில் சுதந்திரக் கொடியை ஏற்றி வைத்தார்.

இதன்போது அவர் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மலரஞ்சலியும் செலுத்தியுள்ளார்.

சுதந்திர தினத்தையொட்டி, தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி நள்ளிரவில் ஆங்கிலேய ஆட்சி அதிகாரத்திலிருந்து விடுபட்டு இந்தியா சுதந்திரமடைந்தது.

இந்திய சுதந்திர தினம் குறித்த சுவாரஸ்யமான விடயங்கள் சில:

  • இந்தியா சுதந்திரம் பெற்ற 1947, ஆக.15 இல் நாட்டிற்கு பிரத்தியேகமாக தேசிய கீதம் இல்லை. 1911 இல் ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட ‘ஜன கண மன’ பாடல் 1950ல் தான் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • இந்தியா சுதந்திரம் அடைந்த தினத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தி கொல்கத்தாவில் இருந்தார். மத மோதல்களை எதிர்த்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார்.
  • கதர் துணியில் மட்டுமே தேசியக்கொடி தயாரிக்கப்பட வேண்டும். மற்ற வகை துணிகளில் கொடியைத் தயாரிப்பது தண்டனைக்குரிய குற்றம்.
  • அரபிந்தோ கோஸ், நெப்போலியன் போனபார்ட் ஆகியோர் ஆகஸ்ட் 15 இல் பிறந்தவர்கள்.
  • 1947 இல் இந்தியாவின் ஒரு ரூபாய் அமெரிக்காவின் ஒரு டொலருக்கு சமமாக இருந்தது.
  • இந்தியா சுதந்திர தினம் கொண்டாடும் ஆகஸ்ட் 15 அன்று தென்கொரியா, பஹ்ரைன், காங்கோ ஆகிய மூன்று நாடுகள் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றன.
  • இந்தியாவில் சுதந்திரத்தின் போது 1,100 மொழிகள் வழக்கத்தில் இருந்தன. தற்போது 880 மொழிகள் மட்டுமே உள்ளன.
  • 1947 இல் சுதந்திரம் பெற்றவுடன் 14 பேர் கொண்ட முதல் அமைச்சரவை பதவியேற்றது. நேரு பிரதமராகவும், வல்லபாய் படேல் உள்துறை அமைச்சராகவும் பதவியேற்றனர்.
  • இந்திய பிரதமராக செங்கோட்டையில் 17 முறை ஜவகர்லால் நேரு தேசியக்கொடியை ஏற்றி வைத்துள்ளார். அதிகமுறை கொடியேற்றியவர் என்ற பெருமையை நேரு பெறுகிறார்.
  • இந்தியா சுதந்திரம் பெற்ற போது 562 சுதேச சமஸ்தானங்களாக பிரிந்து இருந்தன. இவை அனைத்தையும் ஒன்று சேர்த்த சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ என்று பெயர் பெற்றார்.
  • ‘ஜெய்ஹிந்த்’ எனும் உத்வேகமளிக்கும் வார்த்தையை முதன்முதலில் கூறியவர் நேதாஜி என அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ்.