முகம்மத் இக்பால்
மைத்திரிபால சிரிசேனாவின் தலைமையிலான நல்லாட்சிக்கான அரசாங்கத்தை தானே கொண்டு வந்ததாகவும் முஸ்லிம் காங்கிரஸ் இறுதியாகத்தான் மகிந்தவை விட்டு வெளியேரியதாகவும் கூறி ரிசாத் பதியுதீன் அவர்கள் முழுப்பூசனிக்காயை சோத்துக்குள் மறைக்கப்பார்கின்றார். இது மக்களின் மறதியில் உள்ள அவரது அபார நம்பிக்கையை காட்டுகின்றது.
மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கும் வரைக்கும் காத்திருந்து, அறிவித்தவுடன் மைத்திரிபால சிரிசேனா தலைமையிலான குழுவினர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி ஐ.தே.கட்சியுடன் கூட்டுச்சேர்ந்தனர். இந்தக் குளு வெளியேறிய பின்பு முதன் முதலில் மஹிந்தவைவிட்டு வெளியேறியவர் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் ஆவார். ரிசாத் பதியுதீனுடன் ஏற்பட்ட முறுகளினால் இவர் ஏற்கனவே அகில இலங்கை மக்கள் காங்கிரசிலிருந்து வெளியேறி இருந்தார்.
முஸ்லிம் விரோதப்போக்கினால் இந்நாட்டு முஸ்லிம்கள் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் மீது வெறுப்புக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஹுனைஸ் பாரூக்கின் முதலாவது வெளியேற்றமானது அவரை முஸ்லிம்கள் மத்தியில் ஒரு கதாநாயக அந்தஸ்துக்கு உயர்த்தியது.
அத்துடன் ரிசாத் பதியுதீனின் ஆதரவாளர்கள் உட்பட வன்னி மாவட்ட முஸ்லிம் மக்கள் அனைவரும் ஹுனைஸ் பாரூக்கின் பின்னால் அணிதிரண்டனர். இதனால் காழ்ப்புணர்ச்சி கொண்ட ரிசாத் அவர்கள் செய்வதறியாது தடமாரினார். தனது இடத்தை வன்னி மாவட்டத்தில் ஹுனைஸ் பாரூக் நிறப்பிவிட்டார். எனவே ஜென்மத்திலும் இனிமேல் தன்னால் பாராளமன்ற உறுப்பினராக வர முடியாது என்று குழம்பினார்.
ராஜபக்ஸ சகோதரர்களை விட்டு பிரியவும் முடியாத அதேவேளை, எதிர்கால அரசியலுக்காக வன்னி மக்களின் வாக்குகளை இழக்கவும் முடியாது என்ற நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அதி உயர்பீட கூட்டத்தில் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க முடிவு எடுத்ததாக செயலாளரினால் ஊடகங்களுக்கு அறிக்கை விடப்பட்டது. அறிவிக்கப்பட்டு சில தினங்களுக்கு பின்பு தாங்கள் இன்னும் யாரை ஆதரிப்பது என்று தீர்மானிக்கவில்லை என்று மீண்டுமொரு அறிக்கை விட்டார்கள்.
அந்த சந்தர்ப்பத்தில் மகிந்தவின் உத்தரவின் பேரில் தனது எம்பி பதவியிலிருந்து ஏ.எச்.எம். அஸ்வர் ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து அஸ்வரின் இடத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த அமீரலிக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இதன் மூலம் மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பது என்ற முடிவை ரிசாத் பதியுதீன் அறிவிப்பார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முடிவை அறிந்து அவர்களுக்குள் தன்னை நுளைத்துக்கொள்ளும் தந்திரத்தில் ஆர்வமாக இருந்தார் ரிசாத். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தனது முடிவை அறிவிப்பதில் அவசரப்படவில்லை.
இப்படியான அரசியல் பரபரப்பான சூழ்நிலையில் எதிர்பாராதவிதமாக சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சி தொகுப்பாளர் ரங்கா அவர்களுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் அலறி மாளிகையில் வைத்து ரிசாத் பதியுதீன் அவர்கள் ரங்காவை தாக்கினார். ரங்கா அவர்கள் நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பர் என்பதனால் தனது இல்லத்தில்வைத்து ரங்காவை தாக்கியதனை பொறுத்துக்கொள்ள முடியாமல், ரிசாத் பதியுதீனுக்கு நாமல் ராஜபக்ஸ தாக்கினார். இதனால் ஆத்திரமுற்ற ரிசாத் பதியுதீன் அவர்கள் உடனடியாக மஹிந்த அரசைவிட்டு வெளியேறினார். இவரது வெளியேற்றம் ஒரு எதிர்பாராத விபத்து என்றே அரசியல் ஆய்வாளர்களினால் அன்று கூறப்பட்டது.
ரிசாத் பதியுதீனுக்கு நாமல் ராஜபக்ஸ தாக்கியிருக்காவிட்டால் மகிந்த ராஜபக்சவை விட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெளியேறி இருக்கமாட்டாது. வெளியேறாமல் இருக்கும்பொருட்டே அமீரலிக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொண்டதன் மூலம் தான் மஹிந்தவுக்கதான் ஆதரவு என்று மறைமுகமான சமிக்சையை ரிசாத் வழங்கியிருந்தார்.
இதற்கிடையில் முஸ்லிம்களை இந்நாட்டில் அழிக்க வேண்டும் என்று செயட்பட்டுக்கொண்டிருக்கும் பொதுபலசேனா அமைப்பினர் மஹிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக தெற்கிலே பிரச்சாரத்தினை தீவிரமாக மேற்கொண்டிருந்தனர். முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த அரசைவிட்டு வெளியேறாமல் இருக்கும் பொருட்டு சிங்களவர்கள் மத்தியில் துவேசத்தை வெளிப்படுத்தும் எந்தப்பிரச்சாரத்தினையும் மேற்கொள்ள முடியாமல் பொதுபலசேனா கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இதனை முன்கூட்டியே ஊகித்ததனால் தெற்கிலே சிங்களவர்கள் மத்தியில் பொதுபலசேனாவின் துவேசப் பிரச்சாரத்தினை தடுக்கும் பொருட்டு முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த அரசை விட்டு வெளியேறுவதில் தாமதத்தை காட்டியது. ஆனால் உள்ளூரில் இருக்கும் முஸ்லிம் காங்கிரசின் அனைத்துக்கட்டமைப்புக்களும் மைத்திரிபால சிரிசேனாவுக்கே தேர்தல் வேளைகளில் ஈடுபட்டது. மைத்ரிக்கு ஆதவளிக்கும்படி தலைவர் ஹகீம் அவர்கள் தனது போராளிகளுக்கு மறைமுகமாக சமிக்சை வழங்கியிருந்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த அரசை விட்டு வெளியேறி வரும் வரைக்கும் கிழக்கு மாகாணத்தின் எந்தப்பகுதிக்கும் மைத்ரிபால சிரிசேனா வருகைதரவில்லை. வெளியேறிய அன்றே தலைவர் ஹக்கீமுடன் கல்முனையில் ஏற்கனவே ஏற்பாடாகியிருந்த கூட்டத்துக்கு மைத்ரிபால வருகைதந்தார். இதன்மூல அரசியல் ராஜதந்திரத்தினை விளங்கிக்கொள்ளகூடியதாக இருந்தது.
நேரகாலத்தோடு முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த அரசைவிட்டு வெளியேறி இருந்தால் தெற்கில் பொதுபலசேனாவின் துவேச பிரச்சாரத்தினால் சிங்களவர்களின் வாக்குகள் அதிகரித்து மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் வெற்றி பெறுவதுக்குரிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருந்தது. இதனை தடுக்கும் பொருட்டே முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த அரசைவிட்டு வெளியேறுவதில் தாமதத்தை காட்டியது. இதனைத்தான் அரசியல் சாணாக்கியம் என்பது.
இதனை விளங்கிக்கொள்ளாமல் மேலோட்டமான பார்வையின் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் இறுதி நேரத்தில்தான் மஹிந்தவைவிட்டு வெளியேறியது என்று கூறுவது தவறானது. அதேவேளை ஹுனைஸ் பாரூக் ஏற்ப்படுத்திய அதிர்ச்சியினாலும், நாமல் ராஜபக்ஸ நடத்திய தாக்குதலாலுமே ரிசாத் பதியுதீன் அவர்கள் மஹிந்த ராஜபக்சவை விட்டு வெளியேறினாரே தவிர மக்களுக்காக அல்ல. என்பதே உண்மை.