10 பாராளுமன்ற உறுப்பினர்களோடு ஆட்சியில் அமரவிருக்கின்றோம் – ரவூப் ஹக்கீம்

 

பாரிய அபிவிருத்தி யுகத்தை நோக்கிய பயணம் ஆரம்பமாக இருக்கின்றது. ஆகையால், இனவாத சக்திகளுக்கு இடமளிக்காது, சகல இனத்தவரையும் அரவணைத்துச் செல்லும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு பெறுமதியான வாக்குகளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சரும், கண்டி மாவட்ட ஐ.தே.முன்னணி வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இவ்வாறு தேர்தல் பிரசார இறுதித்தினமான வெள்ளிக்கிழமை (14) நண்பகல் யட்டிநுவர தொகுதியில் தெஹியங்கக் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் ஹக்கீம இதனைத் தெரிவித்தார்.

_DSC0374_Fotor

அங்கு உரையாற்றும் போது அவர் மேலும் கூறியதாவது.

பாரிய அபிவிருத்திகளை எமது சமூகம் எதிர்பார்த்திருந்த நிலையில் அதில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்ற விமர்சனம் இருந்தாலும் கடந்த கால ஆட்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் நாம் பங்குவகித்த போது, அந்த ஆட்சி நீடிக்காமல் இடைநடுவில் கலைக்கப்பட்ட நிலையில் எங்களது இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, ஒரு ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்த பின்னணியில் மாற்று அரசாங்கததில் சேரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட பொழுது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் எங்களை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நடத்திய நிலையில், அரசாங்கத்தின் உள்ளேயிருந்து சமூகப்பிரச்சினைகளை காட்டமாகப் பேசிகின்றோம் என்ற காரணத்தினால் எங்களை ஓரங்கட்டி, ஒதுக்கி நடக்கின்ற சூழலில் எங்களை நிறையப் பாதித்திருந்தது.

அதன் விளைவாக எங்களால் போதியளவு பாரிய அபிவிருத்திகளை செய்ய முடியாது போனாலும், அமையப்போகின்ற ஆட்சி ஸ்திரமானதான, நிலையான ஆட்சியாக இருக்கும் நிலையில், அதிலொரு முக்கிய பங்காளியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவராகிய நான், 10 பாராளுமன்ற உறுப்பினர்களோடு அந்த ஆட்சியில் அமரவிருக்கின்றோம்.

கண்டி மாவட்டம் நான் பிறந்த மண். எனது பெற்றோர் பிறந்த மண். ஆகையால் வேறு மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு அழைப்புக்கள் வந்த போதிலும். முன்னர் வெளிமாவட்டங்களில் அவ்வாறு போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்த போதிலும் மீண்டும் கண்டியிலேயே களமிறங்குவதற்கு நான் தீர்மானித்தேன்.

வேறு எந்த மாவட்டத்திற்கும் கிடைக்காத ஒரே மாவட்டத்தில் அமைச்சர் அந்தஸ்தில் இருக்கும், இருக்கப் போகும் முஸ்லிம் வேட்பாளர்கள் இருவர் போட்டியிடும் வாய்ப்பு இந்த கண்டி மாவட்டத்திற்கு கிட்டியுள்ளது. இந்த அனுகூலம் சிறுபான்மைச் சமூகங்கள் உட்பட கண்டி வாழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தி, அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதற்கு எங்களுக்கு பெரிதும் உதவும்.

தெஹியங்க உட்பட கண்டி மாவட்ட கிராமப் பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகளும், பௌதீக வளங்களும் மிகவும் குறைவாக இருப்பதால், அவற்றை நிவர்த்தி செய்வதில் புதிய அரசாங்கத்தில் நாங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் நாட்டின் ஆட்சியை நாங்கள் கைப்பற்றுவோம். சீர்கேடாகக் காணப்படும் பாதைகளையும் அபிவிருத்தி செய்வோம். மத்திய அரசினூடாகவும், மாகாண சபையினூடாகவும் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

நகர அபிவிரத்தி, நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் என்ற முறையில் கண்டி மாவட்டத்திலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு அவற்றில் பலவற்றிற்கு உரிய அங்கீகாரம் ஏற்கனவே பெறப்பட்டுள்ளது.

முழு யட்டிநுவர தொகுதியையும் உள்ளடக்கியதாக பாரிய நீர் வழங்கல் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளோம். யட்டிநுவர, பாத்ததும்பற மற்றும் கண்டி வடக்கு பாரிய நீர் வழங்கல் திட்டமொன்றை அமுல்படுத்துவதற்காக நாம் அரசாங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றோம். அந்த நீர் வழங்கல் திட்டம் ஆறாயிரம் கோடி ரூபா செலவில் யட்டிநுவர முழு பாத்ததும்பர, ஹாரீஸ்பத்துவ தொகுதியில் மலைப்பாங்கான பிரதேசங்களை உள்ளடக்கியதாக முன்னெடுக்கப்படவுள்ளது. அமையவிருக்கும் எங்களது அடுத்த அரசாங்கத்தில் இவ்வாறு பாரிய அபிவிருத்தி யுகத்தை நோக்கிய பயணம் ஆரம்பமாக இருக்கின்றது. ஆகையால், இனவாத சக்திகளுக்கு இடமளிக்காது ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு பெறுமதியான வாக்குகளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.

முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஷாபி ஹாஜியார், சட்டத்தரணி பஸ்லின் வாஹீத் ஆகியோரும் உரையாற்றினர்.

முன்னதாக அமைச்சர் ஹக்கீம் கடுகண்ணாவை குறுக்கத்தலை, யட்டிநுவர தொலுவ ஆகிய கிராமங்களில் நடைபெற்ற கூட்டங்களிலும் உரையாற்றினார்.

_DSC0356-2_Fotor _DSC0371_Fotor