அமைச்சர் றிஷாத் கலாநிதி இஸ்மாயிலின் பிரச்சினைக்கு மாற்றுத் தீர்வினை முன் வைப்பாரா..??

 

 

பல தசாப்தங்களாய் பாதுகாக்கப்பட்டு வந்த சம்மாந்துறை பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தினை சம்மாந்துறை மக்கள் கடந்த ஒரு தசாப்த காலமாக இழந்து தவிக்கின்றனர்.கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மு.காவினூடாக  தங்களது உறுப்புருமையினை இலகுவாக பாதுகாக்கக் கூடிய நிலை இருந்தும் “வென்றால் அமைச்சர் தோற்றால் எம்.பி” எனும் கோசத்தினை நம்பி அணிதிரன்டதன் விளைவாக தங்கள் பிரதிநிதித்துவத்தினை இழந்த வரலாற்றினை சம்மாந்துறை மக்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலப்பகுதியில் தேர்தலில் களமிறங்கி தோல்வியினைத் தழுவும் யாருக்கும் தேசியப் பட்டியல் கிடைக்காது என அந் நேரத்தில் ஐ.ம.சு.கூவின் தலைவராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸ தெளிவாக கூறி இருந்த போதும் மக்களினை திட்டமிட்டு ஏமாற்றி இருந்தனர்.வெற்றி வாய்ப்பு கிஞ்சித்தேனும் இல்லை,தேசியப் பட்டியலும் வழங்கப்படாது என்பதை பல வழிகளில் நிறுவிக் காட்டிய போதும் அதனை காது கொடுத்து கேட்கும் மனப் பாங்கில் கூட இல்லாதளவு மூளைச் சலவை செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு மீண்டும் ஒரு தடவை சம்மாந்துறை மக்கள் ஏமாந்து விடக் கூடாது.பகிரங்க அலுவலர் ஒருவர் தான் தேர்தல் கேட்க விரும்பினால் தான் வேட்பு மனுவில் கையொப்பம் இடும் நாளில் இருந்து தேர்தல் முடியும் வரை சம்பளமற்ற விடுமுறை பெற வேண்டும்.அவ்வாறு பார்க்கும் போது அ,இ.ம.கா  வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த 13ம் திகதி கலாநிதி இஸ்மாயில் அவர்கள் விடுமுறை பெற்றிருக்க வேண்டும்.ஆனால்,கலாநிதி இஸ்மாயில் அவர்கள் ஜூலை 22ம் திகதியே உத்தியோக பூர்வமாக இராஜினாமா செய்துள்ளார்.இங்கே சட்டப் பிரச்சினை ஒன்று எழுவதை யாரும் மறுக்க முடியாது.கலாநிதி இஸ்மாயில் அவர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு முன்பு இரு தடவை தனக்கு விடுமுறை கோரி தென் கிழக்கு பல்கலைக் கழக உப வேந்தருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இவ் விடயம் சில வேளை இவரிற்கு எதிராக வழங்குத் தொடுக்கும் போது இவரிற்கு சாதகமாகவும் அமைந்து விடலாம்.இதனைத் தீர்மானிப்பது நானோ? நீங்களோ? அமைச்சர் றிஷாத்தோ? அமைச்சர் ஹக்கீமோ? அல்ல மாறாக நீதி மன்றமே என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இச் சட்டப் பிரச்சினை குறித்து தனது கருத்தினை முன் வைத்த அமைச்சர் ஹக்கீம் “கலாநிதி இஸ்மாயில் அவர்கள் பாராளுமன்றம் சென்றால் தான் தனது காதினை அறுப்பதாக” சற்று காரசாரமான அறிக்கையினை விட்டார்.அமைச்சர் ஹக்கீமின் இக் கூற்றின் பிற்பாடு இவ் விடயம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.உண்மையினை மக்களுக்கு தெளிவு படுத்தும் நோக்கில் மு.காவின்  உயர்பீட உறுப்பினர் சட்டத்தரணி முஸ்தபா அவர்கள் நீதி மன்றம் சென்றார்.சட்டத்தரணி முஸ்தபா அவர்கள் மு.காவின் உயர்பீட உறுப்பினராக இருந்ததன் காரணமாக இப் பிரச்சினை மு.காவிற்கும்,அ.இ.ம.காவிற்குமிடையிலான ஒரு அரசியல் யுத்தமாக உருவெடுத்தது.

உண்மையில் இது மு.காவிற்கும்,அ.இ.ம.காவிற்குமிடையிலான பிரச்சினை அல்ல.இவ் விடயத்தில் கலாநிதி இஸ்மாயிலிற்கு சட்டப் பிரச்சனை இருப்பின்  பாதிக்கப்படப் போவது மு.காவோ? அ.இ.ம.காவோ? அல்ல.இவரிற்கு சட்டப் பிரச்சினை இருந்து அ.இ.ம.கா ஒரு ஆசனத்தினைப் பெறுமாக இருந்தால் அ.இ.ம.காவின் இன்னுமொரு உறுப்பினர் பாராளுமன்றம் செல்வார்.எனவே,பாதிக்கப்படப் போவது சம்மாந்துறை மக்கள் என்பதை உணர்ந்து ஒவ்வொரு சம்மாந்துறை மகனும் இவ் விடயத்தில் அதிக கரிசனை கொள்ள வேண்டும்.எனது இக் கருத்துக்களினைப் பார்க்கும் ஒருவரிற்கு சம்மாந்துறையில் கலாநிதி இஸ்மாயிலிற்கு பாரிய வாக்கு வங்கி உள்ளது போன்ற விம்பம் தோன்றலாம்.அவர் வெற்றி பெறுவாரா?  அவரிற்கு பாரிய வாக்கு வங்கி உள்ளதா? என்பதனை ஆராய்வது எனது இக் கட்டுரையின் நோக்கம் அல்ல.

சம்மாந்துறை மகன் தேர்வாக மாட்டன் எனும் நிலை உள்ள போது சம்மாந்துறை வாக்குகளில் ஒன்று கூட இன்னுமொருவரின் வெற்றிக்காய் அளிப்பது ஏற்கத்தகுந்த ஒரு விடயம் அல்ல என்பதே எனது கருத்து.(அ.இ.ம.காவிற்கு வாக்களிப்பது சமூக இருப்பினைத் தக்க வைத்தல் போன்ற விடயங்களுக்கு உதவுமாக இருப்பின் ஊர் பிரதிநிதித்துவத்தினைப் பார்க்காது வாக்களிப்பது எமது கடமை.ஆனால்,அவ்வாறு நான் கருத வில்லை.) சம்மாந்துறை மக்கள் கடந்த முறை மு.காவினூடாக மிகச் சிறிய வாக்கினால் வெற்றியினைச் சுவைக்க முடியாமல்  போனதால் சிறு தொகை வாக்கு பிரிதலும்  பாரிய தாக்கத்தினைச் செலுத்தும் என்ற படிப்பினையினை பெற்றவர்கள் என்பதை இவ் இடத்தில் நினைவூட்டுவது பொருத்தமானது என நினைகின்றேன்.

இவ் விடயத்தில் அரசியல் கலக்காமல் சம்மாந்துறை பள்ளி வாயால் தலைமைத்துவங்கள்,புத்தி ஜீவிகள் முன் நின்று ஆய்வுகளினை மேற்கொண்டு மக்களிற்கு உண்மைத் தன்மையினை விளங்கப்படுத்தியிருக்க வேண்டும்.இவ் விடயம் பற்றி சம்மாந்துறை மக்கள் அக்கரை கொண்டதனை விட வெளி ஊர் மக்கள் அக்கரை கொண்டது அதிகம் எனலாம்.இவ் விடயத்தில் உண்மைத் தெளிவினைப் வெளிப்படுத்த எமது ஊர்த் தலைமைத்துவங்கள் தவறி விட்டன என்பதும் இங்கே சுட்டிக் காட்டத்தக்க ஒரு விடயமாகும்.

 வியாழக் கிழமை (13-08-2015) சட்டத்தரணி முஸ்தபா அவர்களினால் முன் வைக்கப்பட்ட வழங்குத் தாக்கல் தள்ளுபடி செய்யப்பட்ட தகவலினைத் தொடர்ந்து ஏதோ? கலாநிதி இஸ்மாயிலிற்கு சட்டச் சிக்கல் இல்லை என்ற காரணத்தினாலேயே இவ் வழக்கு தள்ளு படி செய்யப்படுள்ளதான விம்பம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.சம்மாந்துறையில் வீ.சீ அணியினர் வெடில் கொளுத்தி ஆராவாரமும் செய்துள்ளனர்.மேலே முன் வைத்துள்ள குற்றச் சாட்டின் காரணமாக இத் தேர்தலில் வீ.சீ போட்டி இட தகுயற்றவர் என்றால் அ.இ.ம.காவின் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் அம்பாறை மாவட்ட தேர்தல் ஆணையாளரினால் செல்லுபடியற்றதாக நிராகரிக்கப்பட்டிருக்கும்.வேட்பு மனுவினை நிராகரிக்கும் நிபந்தனையினுள் இவ் விடயம் இல்லாத காரணத்தினால் அ.இ.ம.காவின் வேட்பு மனு ஏற்கப்பட்டிருந்தது.எனவே,வேட்பு மனு வழங்கப்பட்டதிலிருந்தே இவர் தேர்தல் கேட்பதனை சட்ட ரீதியாக தடுக்க முடியாது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

இவர் தேர்தல் கேட்பதில் பிரச்சினை இல்லையென்றாலும் பாராளுமன்றம் செல்வதில் பிரச்சினை உண்டு என்பதே பலரினதும் வாதமாகும்.இதனைத்  தான் பலரினாலும் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.காலாநிதி இஸ்மாயில் பாராளுமன்றம்  செல்ல முடியுமா? என்றே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.எதிர் காலத்தில் நடக்கலாம்/நடக்காமல் விடலாம் என்ற ஒரு விடயத்தினை நீதி மன்றம் தற்போது ஆராய வேண்டிய அவசியம் இல்லை என்ற காரணத்தினால்  “தெரிவானால் பார்போம்” என்ற விதத்தில் தற்காலிகமாக தள்ளுபடி செய்துள்ளது.இவர் பாராளுமன்றம் தேர்வானால் வழக்குத் தாக்கல் செய்யலாம் என்பதை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.

மு.கா இப் பிரச்சினையினை தூக்கிப் பிடித்துள்ளதாக பலரும் பல குற்றச் சாட்டினை முன் வைக்கின்றனர்.சம்மாந்துறை மக்களின் பாராளுமன்றத் தாகத்தினை வைத்து சிந்திக்கும் போது  ஒரு விதத்தல் இப் பிரச்சினை வெளிக் கொணரப்பட வேண்டிய ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மை.எனினும்,இப் பிரச்சினை மூடி  மறைக்கப்படக் கூடிய ஒன்றல்ல.இவர் இராஜினாமா செய்யவில்லையே என்ற சல சலப்பு ஏற்பட்டதானது அவரது கட்சியில் உள்ள அனைவருக்கும் தெரியும்.மயில் ஆசனம் ஒன்றினைக் கைப் பற்றி அவ் ஆசனம் கலாநிதி இஸ்மாயிலிட்குச் சென்றால் அ.இ.ம.காவில் உள்ள அடுத்த உறுப்பினர் இப் பிரச்சினையினை கிளறி  மீண்டும் தூக்கிப் பிடிப்பார் என்பது யதார்த்தமான நிலை.

எனவே,இப் பிரச்சினை மறைக்கக் கூடிய ஒன்றல்ல.இன்று இவர் இல்லாவிட்டால் நாளை இன்னுமொருவர் தோன்றத்தான் போகிறார்கள்.எனவே,யார் தூக்கிப் பிடித்தார்கள் என்பது முக்கியமல்ல கிளறிய விடயம் உண்மையா என்பதே முக்கியமாகும்.

சட்டப் பிரச்சினை இருக்கின்றதா? இல்லையா? என்பது பற்றி நீதி மன்றமே தீர்மானிக்கும் ஒரு விடயமாகும்.எனவே,யார் இவ் வழக்குத் தாக்கலில் வெல்லுவார் என்பதை விட இதற்கான மாற்றுத் தீர்வினை சிந்திப்பதே இச் சந்தர்ப்பத்தில் பொருத்தமானது எனலாம்.மயில் ஓர் ஆசனத்தினைப் பெற்று,கலாநிதி இஸ்மாயில் பாராளுமன்றம் செல்ல அனைத்துக் காரணிகளும் சாதகமாக இருந்து,இக் குறித்த பிரச்சினை காரணமாக பாராளுமன்றம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால்,அதற்கு மாற்றீடாக சம்மாந்துறை மண்ணிற்கு ஒரு தேசியப் பட்டியலினை அமைச்சர் றிஷாத் வழங்க பகிரங்கமாக உறுதி மொழி வழங்கினால் நாம் இதைப் பற்றி சிறிதும் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.ஆனால்,உறுதி மொழி வழங்குவார? கலாநிதி இஸ்மாயில் பாராளுமன்றம் செல்ல அனைத்துக் காரணிகளும் சாதகமாக உள்ள போதே தேசியப் பட்டியல் வழங்க உறுதி மொழி கேட்பதால் நாம் கேட்பது நியாயமற்ற ஒன்றும் அல்ல.அக் குறித்த நபர் யார் என்பதனையும் தெளிவாக குறிப்பிடல் வேண்டும்.

அமைச்சர் றிஷாத் இவரின் வழக்கு தாக்கல் விடயத்தில் எது வித சட்டச் சிக்கலும் இல்லை என்பதில் உறுதியாக இருப்பின் இவ் உறுதி மொழியினை வழங்க சிறி தேனும் தயங்க வேண்டிய அவசியம் இல்லை.சட்டச் சிக்கல் இருப்பின் இவ் உறுதி மொழியினை வழங்குவதில் சில பிரச்சினை உள்ளது.அமைச்சர் றிஷாத் உறுதி மொழி வழங்கத் தயங்கினால்? எங்கோ பிரச்சினை உள்ளது என்பதை அறிந்து கொள்ளளாம்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்