கல்முனை நகரில் Cargills Food City; முதல்வரின் ஒப்பந்தத்தினால் மாநகர சபைக்கு 2 கோடி வருமானம்!

Aslam moulana (A) (7)_Fotorஅஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் Cargills Food City (கார்கில்ஸ் புட் சிட்டி) நிறுவனத்தை அமைப்பதற்கு அந்நிறுவனம் கல்முனை மாநகர சபையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது.
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் விடுத்த அழைப்பை ஏற்றே அந்நிறுவனம் இதற்கு முன்வந்துள்ளது.
இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று அந்நிறுவனத்தின் கொழும்பு தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில் கல்முனை மாநகர சபையின் சார்பில் முதல்வர் நிஸாம் காரியப்பர் மற்றும் Cargills Food City நிறுவனத்தின் சார்பில் இம்தியாஸ் பயாஸ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் அமைந்துள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியின் மேல் தளம் 15 வருட காலத்திற்கு Cargills Food City நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்படுவதுடன் அதற்காக அந்நிறுவனம் கல்முனை மாநகர சபைக்கு இரண்டு கோடி ரூபாவை வாடகைப் பணமாக செலுத்தவுள்ளது.  
கல்முனை மாநகர சபையின் வரலாற்றில் ஒரு வர்த்தக நிறுவனத்தின் ஊடாக இந்தளவு பெருந்தொகை நிதி இலாபகரமாக கிடைக்கப் பெற்றுள்ளமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
கல்முனை மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பரின் கருத்திட்டத்தில் உருவான இந்த ஐக்கிய சதுக்க திட்டம், கல்முனை மாநகர சபையினால் சுமார் இரண்டு கோடி ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் முதற்கட்டப் பணிகள் நிறைவுற்று, கடந்த 9 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஐக்கிய சதுக்கம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய சதுக்க திட்டத்தின் கீழ் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர் அரங்கு அமையப் பெற்றிருப்பதுடன் வர்த்தக கடைத் தொகுதி, உணவகம் உட்பட மற்றும் பல அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் நீண்ட காலமாக மிக மோசமான நிலையில் காணப்பட்ட கல்முனை தனியார் பஸ் நிலையம் ஆசியா பவுண்டேஷனின் கொய்கா திட்டத்தின் கீழ் சகல வசதிகளும் கொண்ட வாகனத் தரிப்பிடமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக ஐக்கிய சதுக்க முற்றத்தில் அமானா வங்கியின் அனுசரணையுடன் 2.5 மில்லியன் ரூபா செலவில் அதி நவீன பஸ் தரிப்பிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இந்த ஐக்கிய சதுக்கத்தில் வாகனங்களில் இருந்தவாறே பயணிகள் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்காக Drive Through ATM ஒன்றை அமானா வங்கி அமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்முனை நகரை அழகுபடுத்தி அபிவிருத்தி செய்யும் முதல்வரின் தூரநோக்கு சிந்தனை திட்டத்தின் மூலம் இரவு நேரத்திலும் கல்முனை நகரம் வர்த்தகர்கள், பொது மக்கள் மற்றும் பயணிகளின் பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளமை குறித்து வர்த்தக சமூகத்தினரும் பொது மக்களும் முதல்வருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கின்றனர்.
logo_image