அடுத்த ஐ.தே.க. அரசாங்கத்தில் சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை உருவாக்கப்படும் என்ற உத்தரவாதம் எவரது அரசியலுக்கும் தீனி போடுவதற்காக அல்லாமல் எத்தகைய சவால்கள் வந்த போதிலும் அதனை நிறைவற்றித் தருவதற்கான உறுதிமொழியாக இருக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் எம்.ஐ.அப்துல் ஜப்பார், பொதுச் செயலாளர் கலீல் எஸ்.முஹம்மட் ஆகியோர் கையொப்பமிட்டு பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
“2015-08-09ஆம் திகதி கல்முனையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தங்களது உரையின்போது புதிய அரசாங்கத்தில் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி சபையை ஏற்படுத்தித் தருவேன் என்ற உத்தரவாதத்தை வழங்கிஇருந்தீர்கள.
எமது மறுமலர்ச்சி மன்றத்தின் இடைவிடாத நீண்ட கால போராட்டம் நாட்டின் பிரதமரான உங்களை கல்முனை மண்ணுக்கு வந்து இந்த உறுதிமொழியை சொல்ல வைத்திருக்கிறது.
அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பழைமை வாய்ந்த பிரதேசமான சாய்ந்தமருதுக்கு 1897 ஆம் ஆண்டு தொடக்கம் ஓர் உள்ளூராட்சி அதிகாரம் இருந்து வந்துள்ளது. பிந்திய காலத்தில் கரைவாகு தெற்கு கிராம சபை எனும் பெயர் கொண்டு அழைக்கப்பட்டு வந்த இந்த உள்ளூராட்சி சபையானது, 1987 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 15 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் இல்லாதொழிக்கப்பட்டமை ஒரு துரதிஷ்டமான வரலாறாகும்.
அதாவது கரைவாகு பட்டின சபையுடன் கரைவாகு தெற்கு, வடக்கு, மேற்கு ஆகிய மூன்று கிராம சபைகளும் இணைக்கப்பட்டு, முழுக் கல்முனைத் தேர்தல் தொகுதிக்கும் பொதுவாக ஓர் உள்ளூராட்சி மன்றமாக கல்முனை பிரதேச சபை உருவாக்கப்பட்டது. அதுவே இன்று கல்முனை மாநகர சபையாக இயங்கி வருகின்றது.
இப்படி இப்பகுதி மக்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து கொள்ளாமல் இரவோடு இரவாக எங்களது உள்ளூராட்சி அதிகாரத்தை இல்லாதொழித்து எமது அடிப்படை உரிமை, அபிலாஷைக்கு சாவுமணி அடிக்கப்பட்டதை உங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
அதன் விளைவாகவே தம்மிடமிருந்து பறிக்கப்பட்ட உள்ளூராட்சி அதிகாரத்தை மீளவும் ஏற்படுத்தித் தருமாறு மக்கள் சார்பில் அரசியல் தலைவர்களிடம் எமது மறுமலர்ச்சி மன்றத்தினால் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதுடன் அதற்காக பிரதேசத்திலுள்ள சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்த சம்மேளனத்தின் ஊடாக 2005 ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.
2001-2004 காலப் பகுதியில் தாங்கள் பிரதமராக பதவி வகித்த காலத்திலும் 2015 ஜனவரி 8 ஆம் திகதி நல்லாட்சி உதயத்துடன் தாங்கள் பிரதமராக பதவி ஏற்ற பின்னரும் இக்கோரிக்கையை வலியுறுத்தி மகஜர்களை தங்களுக்கு அனுப்பி வைத்திருந்தோம்.
அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜெயசூரிய மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகளிடமும் கோரிக்கை விடுத்திருந்தோம்.
அதேவேளை எமது நீண்ட கால அழுத்தங்களின் பயனாக சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம், உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜெயசூரியவை சந்தித்து பேசியதன் பயனாக அவர் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபையை ஏற்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்திருந்ததுடன் வர்த்தமானி அறிவித்தளுக்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.
எனினும் பல மாதங்கள் கடந்தும் நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்டிருக்கவில்லை. இதுவே இன்று மக்கள் மத்தியில் பாரிய அங்கலாய்ப்பையும் அதிருப்தியையும் தேர்தல் களத்தில் குழப்பகரமான சூழ்நிலையையும் தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில்தான் உங்களது உத்தரவாதம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேர்மை, வாய்மைக்கு உதாரண புருஷராகத் திகழ்கின்ற ஒரு கனவான் அரசியல் தலைமையான நீங்கள் எவரது அரசியலுக்கும் தீனி போடுவதற்காக அல்லாமல் எத்தகைய சவால்கள் வந்த போதிலும் எமது மக்களின் இழந்த உரிமையை மீட்டுத் தருவதில் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.