பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் மரணம் விபத்தா? அல்லது அது திட்டமிடப்பட்ட கொலையா என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மும்முரமான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் தடுமாற்றம் அடைவது ஏன் என மக்கள் விடுதலை முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலை மை அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் சடலமானது கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள சாலிகா விளையாட்டு மைதானத்தில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் இது கொலை என தொடர்ச்சியாக சந்தேகிக்கப்பட்டு இது தொடர்பிலான விசாரணைகள் மும்முரமாக இடம்பெற்றுவரும் நிலையில் கடந்த 10 ஆம் திகதி இவரின் சடலமானது மேலதிக விசாரணைகளுக்காக சட்ட வைத்திய அதிகாரிகளினால் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது.
நீதிமன்ற விசாரணைகளும் சட்டப்படி நடைபெற்று வரும் நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பினை சேர்ந்த உறுப்பினர்கள் இது தொடர்பில் தடுமாற்றம் அடைகின்றனர். இதிலிருந்து குறித்த சம்பவத்திற்கும் இவர்களுக்கும் ஏதேனும் தொடர்புகள் இருப்பதாக புலப்படுகின்றது.
அந்த வகையில் இது தொடர்பில் விசாரணைகள் அவசியம் என்பதே எமது தனிப்பட்ட கருத்தாகும். இது தேர்தலை இலக்காகக் கொண்டுதான் மேற்கொள்ளப்படுகின்றது என்பதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
மறுபுறம் தேர்தல் முடியும் வரை எந்த ஒரு வேட்பாளரையும் நிதிப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்து விசாரணைகளை மேற் கொள்ளக் கூடாது என்பதனையும் நாம் ஏற்றுகொள்ளப்போவது இல்லை. காரணம் எந்த ஒரு தரப்பினர் மீதும் குற்றங்கள் முன்வைக்கப்பட்டிருப்பின் அது தொட ர்பிலான விசாரணைகள் சட்டத்தின் படி முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என்பதே எம்முடைய தனிப்பட்ட கருத்தா கும் என்றார்.