பிரதி நீதி அமைச்சர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவாரா?

Sujeewa-Senasinghe

பொலிஸ் அதிகாரி ஒருவரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கு எதிராக சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி எந்த நடவடிக்கையையும் எடுக்க வேண்டாம் என உயர்நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. 

சுஜீவ சேனசிங்க தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை ஆராய்ந்த பின்னரே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

மாலபே பிரதேசத்தில் தான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தின் சார்ஜன்ட் ஒருவர் தனது பிரசார நடவடிக்கைகளுக்கு தடையேற்படுத்தியதாக சுஜீவ சேனசிங்க நீதிமன்றத்தில் கூறியுள்ளார். 

இது குறித்து தான் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இவ்வாறான நிலையில், பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.