மகிந்தவுக்கு மீண்டும் சவால் விடுக்கிறார் சம்பிக்க !

sampika-ranawaka

மீள்கட்டுமான அபிவிருத்தி முகவர் நிறுவனத்தின் (ராடா) ஊடாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு பணம் கொடுக்கப்பட்டதா இல்லையா என்பது தொடர்பில் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான  பாட்டலி சம்பிக்க ரணவக்க மீண்டும் சவால் விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி, புலி அமைப்புக்கு நிதி வழங்கிய முறைமைதொடர்பில் ராடா நிறுவனத்தின் உள்ளக அறிக்கை மற்றும் திறைசேரியூடாக ராடா நிறுவனத்துக்கு நிதி வழங்குவதற்கு முன்னாள் நிதியமைச்சரான மஹிந்த ராஜபக்ஷ கையொப்பமிட்ட அறிக்கையையும் அவர் காண்பித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள கட்சி காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த கணக்குவழக்குகள் ராடா நிறுவனத்தின் தலைமையதிகாரியாக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் ஊடாகவே பேணப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிப மஹிந்த ராஜபக்ஷவோ, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவோ மறுதலிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மீள்கட்டுமான அபிவிருத்தி முகவர் (ராடா) முன்னாள் தலைமை செயல் அதிகாரியான சாலிய விக்கிரமசூரிய, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் 50ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் அண்மையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட சுனாமி வீட்டமைப்பு திட்டத்தில் 127 மில்லியன் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்பு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிறுவனத்தின் தலைமையதிகாரியாக இருந்த டிரான் அலஸ், தன்னை கைதுசெய்வதை தடைசெய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை தொடர்ந்து விசாரணை செய்வதா அல்லது கைதுக்கான இடைக்கால தடையை நீடிப்பதா என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதிக்கு உயர்நீதிமன்றம் கடந்த 30ஆம் திகதி தீர்மானித்தது.

நீதியரசர்களான கே.ஸ்ரீபவன், ஈவா வணசுந்தர மற்றும் ரோஹிணி மாரசிங்க ஆகிய மூன்று பேர் அடங்கிய நிதிபதிகள் குழு இந்த தீர்மானத்தை எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.